இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தமிழக அரசின் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்ற சுயதொழில் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டதொழில் மையத்தின் மூலம் இத்திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்கென 36 நபர்களுக்கு ரூ. 350.00 லட்சம் மானியம் வழங்க கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திட்டமதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.10 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடனாக வழங்கப்படும். அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்கலாம். தொழில் முனைவோர் பங்களிப்பாக பொது பிரிவினர் திட்டமுதலீட்டில் 10 விழுக்காடு சிறப்பு பிரிவினர் 5 விழுக்காடு செலுத்த வேண்டும்.
வணிக வங்கிகள் மூலம் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் கடனுதவி பெற மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் தேர்வுக் குழுவினால் பரிந்துரை செய்யப்படும். திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை மானியம் முறையாக கடனை திருப்பி செலுத்தினால் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். SC/ST பிரிவினருக்கு கூடுதலாக 10 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.
தகுதிகள்: இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க +2 தேர்ச்சி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதிபெற்றவராக இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்களாகவும், உரிமையாளர் அல்லது பங்குதாரர் நிறுவனமாக இருக்கலாம்.
பங்குதாரர் நிறுவனமாக இருப்பின் அனைத்து பங்குதாரர்களும் திட்டத்தின் தகுதிகளுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். இத்திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் அனுமதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழான 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான புதியதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர், www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் இலவசமாக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், தருமபுரி மற்றும் தொலைபேசி எண்: 04342 230892, 8925533942, 8925533941 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக