இரசாயன உரங்களை குறைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 ஜூன், 2024

இரசாயன உரங்களை குறைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சி.


பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி கலைஞர் திட்ட கிராமமான பி.பள்ளிப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.இப் பயிற்சியை பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு எஸ். அருணன் அவர்கள் துவங்கி வைத்து விவசாய விவசாயிகளை பல்வேறு இயற்கை இடு பொருள்களை  பயன்படுத்தி ரசாயன உரங்களை குறைத்து சாகுபடி செய்து, மண் வளத்தை மேம்படுத்தி மகசூலை அதிகப்படுத்த வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.  

மேலும் இப்பயிற்சியில் முன்னோடி இயற்கை விவசாயி திரு சாமி கண்ணு அவர்கள் கலந்து கொண்டு இன்றைய நிலையில் விவசாயிகள் கட்டாயமாக இயற்கை முறையில் விவசாயம் செய்து, இயற்கை இடு பொருட்களை தங்கள் சொந்த இடத்திலேயே தயார் செய்து, பயன்படுத்தி செலவைக் குறைத்து, வருமானத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம், அந்த வகையில் பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிடுவது, நுண்ணுயிர்களை அதிக அளவில் பயன்படுத்துவது, மஞ்சள்  வண்ண அட்டை, வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரங்கள், அதிக அளவில் பயன்படுத்துவது வேப்பங்கொட்டை கரைசல் மற்றும் பஞ்சகாவியா, மீன் அமிலம் ,தசக்காவ்யா, இயற்கை பூச்சி விரட்டி, வளர்ச்சி ஊக்கிகள், கற்பூர கரைசல் போன்றவற்றை தயாரித்து பயன்படுத்துவது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். இப் பயிற்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் திரு தங்கதுரை துணை வேளாண்மை அலுவலர் திரு ஆறுமுகம் உதவி வேளாண்மை அலுவலர்கள் திரு தண்டபாணி  திரு தமிழரசு வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு சரவணன் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள்  சண்முகம், திருப்பதி ஆகியோர்கள் கலந்து கொண்டு இரசாயன உரங்களை குறைத்து இயற்கை முறையில் சாகுபடி செய்வது குறித்த பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். 


மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்பாடுகள், அதனை பதிவிறக்கம் செய்வது குறித்தும் ,உயிர் உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை மேம்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது, பயிற்சியின் முடிவில் 0.2 சதவீத வேப்பங் கொட்டை கரைசல் தயாரித்தல், அரப்பு மோர் கரைசல் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது, மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பல்வேறு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 


இப்பயிற்சியில் உழவர் நண்பர்கள் தமிழரசு மற்றும் கருணாநிதி உட்பட 40 விவசாயிகள் கலந்து கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad