தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (10.06.2024) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 315 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 187 பயனாளிகளுக்கு ரூ.21.93 இலட்சம் மதிப்பீட்டில் பிரத்யேமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள், காது கேளாத மற்றும் வாய்பேசாதோருக்கான ஸ்மார்ட் போன்கள், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இஆப., அவர்கள் வழங்கினார்.
மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் கண் மருத்துவ உதவியாளராக 36 வருடம் பணியாற்றிய திரு.கு.கலையரசன் அவர்கள் பல்வேறு மருத்துவ முகாம்களை நடத்தி சுமார் 2000 கண்புரை நோயாளிகளை கண்டறிந்து, தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மூலம் அறுவைசிகிச்சை மேற்கொண்டு பார்வைத்திறன் பெற உதவியுள்ளார். இதற்காக திரு.கு.கலையரசன் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, கேடயம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் உள்வட்டம், நல்லகுட்லஅள்ளி தரப்பு, அஸ்தகிரியூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் 07.01.2021 அன்று பென்னாகரம் வட்டம் ஊட்டமலை காவேரி ஆற்றில் மூழ்கி எதிர்பாராத விதமாக இறந்தமைக்கு, அவரது தந்தை திரு.கோவிந்தசாமி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-க்கான காசோலையினை வழங்கினார்.
பின்னர் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் திரு. சங்கரன், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக ஓட்டுநர் திரு. எஸ். பொன்னப்பன் ஆகியோர் தங்களுடைய 20 வருட பணிகாலத்தில் விபத்து ஏற்படாமல் மாசற்று பணிபுரிந்தமைக்காக தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுசான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக