பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 ஜூன், 2024

பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


தருமபுரி அரசு விருந்தினர் மளிகையில், தருமபுரி வெண்ணாம்பட்டி சாலை பாரதிபுரம் ரயில்வே மேம்பாலம் அமையுள்ள இடத்தினையும், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திடல் வளாக கட்டடம் கட்டுமான பணிகளையும், தருமபுரி சிப்காட் தொழிற் பூங்கா பணி முன்னேற்றம் குறித்தும்,  ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து நீரேற்றம் மூலம் நீரை ஏரி, குளங்களுக்கு வழங்குவதற்கு திட்ட உருவக்கம் குறித்து மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (15.06.2024) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 


இதனைத் தொடர்ந்து, தருமபுரி வெண்ணாம்பட்டி சாலை பாரதிபுரம் ரயில்வே மேம்பாலம் அமையுள்ள இடத்தினையும், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திடல் வளாக கட்டடம் கட்டுமான பணிகளையும், தருமபுரி சிப்காட் தொழிற் பூங்கா பணி முன்னேற்றம் குறித்தும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுடன் தெரிவித்ததாவது: தருமபுரி நகரத்திற்கும் கிராம பகுதிகளுக்கும் இணைப்பு பாலமாக உள்ள வெண்ணாம்பட்டி, பாரதிபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகின்றது. 01.04.2023 அன்று சட்டபேரவையில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தருமபுரி, பாரதிபுரம் 66 அடி சாலையில் வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம்  அமைக்கப்படும் என அறிவித்தார்கள். பணிக்கான நிர்வாக ஒப்புதல் பெற தேவையான கருத்துரு ரூ.36.15 கோடிக்கு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் நில எடுப்பு பணிகள் முடிவுற்று. பணிகள் துவக்கப்படவுள்ளது. ஒவ்வொரு முறை ரயில் கடக்கும் போதும் கதவுகள் அடைக்கும் போது இரண்டு புறமும் 1000-த்திற்கு மேற்பட்ட இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பேருந்துகள், 108 ஆம்புலன்ஸ் போன்றவை 15 நிமிடம் கத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்பட்டு பணி நிறைவடையும் போது அன்றடும் கிராம பகுதியில் இருந்து நகர பகுதிகளுக்கு வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவதற்கான வழிவகை ஏற்படும். 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 20.01.2022 அன்று தருமபுரியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டடம் கட்ட அரசாணை எண்.468 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக பிரிவு R.A.-1(2) நாள்: 26.09.2022 மூலம் ரூ.36.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.


இக்கட்டடம் கட்ட சுமார் 4.25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  மேலும் இக்கட்டடம் தரைதளத்துடன் கூடிய ஐந்து தளம் கொண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் மொத்த பரப்பளவு 1.38 இலட்சம் சதுர அடி ஆகும். தரைதளத்துடன் கூடிய ஐந்து தளத்தில் மாவட்ட ஆட்சியர் அரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பயிற்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட நகர் ஊரகமைப்பு அலுவலர், தமிழ் வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர், மாவட்ட சமுக நல அலுவலர், இந்து சமய அறநிலைய அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அறை மற்றும் மற்ற பிற துறைக்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட உள்ளது.


இப்புதிய கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் வசதி, மின்தூக்கி வசதி மற்றும் நீரின் அவசியம் கருதி மழைநீர் சேமிப்பு வசதியும் ஏற்ப்படுத்தப்பட உள்ளது. தற்போது ஆறு தளத்திற்கான கட்டடமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு உட்புற பூசு வேலை நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தருமபுரி புறநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள தடங்கம், பாலஜங்கமனஅள்ளி, அதகப்பாடி, ஆகிய கிராமங்களில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள சிப்பாட் பகுதியில் ஒன்றிய அரசின் சுற்றுசூழல் தடையில்லா சான்று கிடைத்தவுடன் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைக்க உள்ளது. OLA நிறுவனம் 700 ஏக்கர் பரப்பளவில் தொழில் துவக்க முன்பதிவு செய்துள்ளது. சிப்காட்டில் அமைய உள்ள தொழிற்சாலைகளில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  


ஓசூர் சிப்காட் தொழிற் பேட்டையில் தற்போது அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது. அதை அடுத்து தருமபுரி சிப்காட் தொழில் பேட்டையிலும் தொழிற்சாலைகள் அதிகம் வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. ஓலா நிறுவனம் இங்கு தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


தருமபுரி சிப்காட்டில் அமைய உள்ள தொழிற்சாலைகள் மூலம் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்பை பயன்படுத்தி தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் வேகமாக வளரும் நிலை ஏற்படும்.  தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் தருமபுரி மாவட்டம் சாலை வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவதால் தருமபுரி மாவட்டம் வேகமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. 


மேலும், காரிமங்கலம் வட்டம், ஈச்சம்பாடியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டிலிருந்து வெளியேறும் மழைக்கால வெள்ள உபரிநீரினை சின்னப்பம்பட்டி, நவலை மற்றும் சிந்தல்பாடி ஏரிகளுக்கு மொரப்பூர், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீரேற்றம் செய்வதன் மூலம் விவசாய நிலங்கள் பெரிதும் பயன்பெறும். இந்த திட்டம் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு முனைப்புடன் உள்ளது. 


இந்த ஆய்வின்போது, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, திரு.இன்பசேகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு. அ.சிவக்குமார்,  நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திரு.செந்தில்குமார்,  உதவி செயற்பொறியாளர்கள் திரு.ஆறுமுகம், திரு.கனேசன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரு.நாகராஜ், சிப்காட் உதவி பொறியாளர் திருமதி. சிந்து, வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad