பாப்பாரப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் அனைத்தையும் இயக்க வேண்டும்- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 ஜூன், 2024

பாப்பாரப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் அனைத்தையும் இயக்க வேண்டும்- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்.


தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 8- ஆவது வார்டு கிளைக் கூட்டம் பாரதிதாசன் தெருவில் நடைபெற்றது. தலைவர் அம்மு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏ.ஜெயா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா சிறப்புரை ஆற்றினார். பாலசுந்தரி, ஆனந்தி, லட்சுமி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தருமபுரி, பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய நகரங்களிலிருந்து பாப்பாரப்பட்டி பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பல பேருந்துகள் கடந்த கொரோனா பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்டன. அதில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் தற்போது வரை இயக்கப்படாமல் உள்ளது. இதனால் அன்றாடம் அலுவலகங்களுக்கு செல்வோர், தினசரி கடைகளுக்கு வேலைக்குச் சென்று வருவோர், கூலித் தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் போதிய பேருந்து வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். 


குறிப்பாக மாலை நேரங்களில் தருமபுரியிலிருந்து வரவேண்டிய பல்வேறு நகரப் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால் 1 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்படுகிறது.  ஷேர் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் அரசு வழங்கும் இலவச பேருந்து பயண சலுகையைப் பெறமுடியாத நிலைக்கு ஆளாகின்றனர்.  நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளையும் பாப்பாரப்பட்டி வழியாக முறையாக இயக்கிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் அனைத்து தெருக்களிலும் தினசரி ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும், அப்புமுதலிதெரு, ஆசிரியர் காலனி, சபரி நகர், முஸ்லீம் தெரு பகுதிகளில் புதிய பைப் லைன் அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும், தருமபுரி ரோடு மற்றும் பாலக்கோடு மெயின் ரோட்டில் சாலையின் இரு புறமும் வடிகால் அமைக்க வேண்டும், அண்ணா சிறுவர் பூங்காவை சீரமைத்திடவேண்டும், அ.பாப்பாரப்பட்டி மோரவள்ளி பகுதிக்கு பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி செய்து தரவேண்டும், அரசு இலவச வீட்டமனைப்பட்டா வழங்கியுள்ள அழகர் மலை அடிவாரத்தில் சாலை, தெருவிளக்கு, வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

Post Top Ad