மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டமாகும்.
இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 ஜூன் மாதத்திற்கான "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் அரூர் வட்டத்தில் இன்று (19.06.2024) காலை 09.00 மணி முதல் நாளை (20.06.2024) காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இத்திட்ட முகாமில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் இன்று (31.01.2024) தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்த பதிவேடுகள், வருகை பதிவேடு மற்றும் துப்பாக்கி லைசென்ஸ் பராமரிக்கப்படும் பதிவேடு, காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள், ஆண்கள் மற்றும் பெண்கள் கைதி அறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், குற்றவாளிகள் பிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வாளரிடம் கேட்டறிந்ததோடு, பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை செய்து சட்டப்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து, அரூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்து, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த்தோடு, புற நோயாளிகள் பிரிவில் கர்ப்பிணி தாய்மார்களிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் கூடத்தையும், உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து நோயாளிகளுக்கு விநியோகம் செய்யும் படுக்கைகள், போர்வைகள், தலையணை உறைகளை துவைக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்தினை ஆய்வு செய்து, படுக்கைகள், போர்வைகள், தலையணை உறைகளை நாள்தோறும் துவைத்து தூய்மையாக வழங்க வேண்டும் என சலவைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கட்டிட பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர், மொரப்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வீட்டுமனை பட்டா வழங்கும் பணிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், ஈட்டியம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதுநீக்கப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அரூர் ஊராட்சி ஒன்றியம், பொன்னேரி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடை கட்டிடம் பழுதடைந்துள்ளதை ஆய்வு மேற்கொண்டு புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அரூர் வட்டம், ஈட்டியம்பட்டிஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டுமானபணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் வேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டிஊராட்சி, மல்லூத்து கிராமத்தில் உள்ள இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படைவசதிகள் குறித்து கேட்டறிந்து, தங்கு தடை இன்றி குடிநீர் விநியோகம் செய்ய அலுவலர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் இப்குதியைச் சேர்ந்த ராஜாங்கன் என்பவரின் இரண்டு பெண் பிள்ளைகள் மூளை வளர்ச்சி இன்றி உள்ளதை தொடர்ந்து, அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் உடனடியாக அந்த மாற்றுத்திறனாளி பெண் பிள்ளைகளுக்கு சக்கர நாற்காலி வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உடனடியாக சக்கர நாற்காலியை அக்குழந்தைகளுக்கு வழங்கினர். தொடர்ந்து, வேப்பம்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியை மாவட்டஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுவகைகள், விடுதியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் மாணவியர்களின்வருகை பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மாணவியர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளின் கற்றல்திறனை ஆய்வு செய்தார்.
மேலும், அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு, சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்து கருத்துக்களை பெற்றார். ஆய்வினை தொடர்ந்து, அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த மதிப்பாய்வின் போது, வருகைதந்த அலுவலர்கள் களத்தின் சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் பதிவு முகாமை பார்வையிட்டு, நேரிடையாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் 81 பயனாளிகளுக்கு ரூ.50.22 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், மகளிர் திட்டம் சார்பில் 38 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் அரூர் ஊராட்சி ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சியில் ஆய்வின் போது திருப்பதி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஊசி மணி, பாசிமணி மற்றும் கவரிங் நகை மற்றும் கவரிங் ஆபரண நகைகள் தயார் செய்து தொழில் தொடங்குவதற்கு கடன் கேட்டு மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி, இம்மனுவின் மீது உடனடியாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் திருப்பதி மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 5 நரிக்குறவ இன மகளிருக்கு வட்டார வணிக வள மையக் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.1.25 இலட்சம் கடனுதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும், தீர்த்தமலை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் உங்கள் ஊராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடி, மாலையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுரை வழங்கவுள்ளார்கள்.
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கௌரவ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.ம.சாந்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. சுவாமிநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.ஜெயந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) திரு.குணசேகரன், மகளிர் திட்ட இயக்குனர் திரு. பத்ஹூ முகம்மது நசீர், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் (பொ) திருமதி.மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. பவித்ரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.மணிவாசகம், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் திரு.முருகேசன், திருமதி.சந்தோஷம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, அரூர் வட்டாட்சியர் திரு.ராதாகிருஷ்ணன், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.ஷகிலா, திரு.இளங்குமரன், மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக