பென்னாகரம் பேருந்து நிலையம் புதியதாக கட்டுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகள், தற்போது கட்டிடப் பணிகள் மட்டும் முடிக்கப்பட்ட நிலையில் தரை அமைக்காமல் பல மாதக்கணக்கில் கிடப்பில் போட்டுள்ளது மாவட்ட நிர்வாகம். இது குறித்து பலமுறை பொதுமக்களும் புரட்சிகர மக்கள் அதிகாரமும் ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வந்தது.
தற்போது தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மக்கள் நிற்க கூட இடமில்லாமல் வெட்ட வெளியில், மழை, வெயிலில் கார்த்திருக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். மேலும் குடிநீர் வசதி, போதுமான கழிவறை வசதி போன்றவை எல்லாம் அறவே இல்லை. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பெரும் நகரங்களுக்கு சென்று வருகின்ற மக்கள், தினமும் அலுவலகத்துக்கு செல்லுபவர்கள் சிறு வணிகர்கள் என பெரும்பான்மையான மக்கள் பாதிக்கிற நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையை கண்டு மாவட்ட நிர்வாகம் தீர்த்துக் கொடுக்காமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அமைதி காத்து நிற்கிறது. எனவே இந்த பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து உடனடியாக திறக்க வேண்டும், மேலும் பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரை சூட்ட வேண்டும். என்ற அடிப்படையில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக பென்னாகரம் கடைவீதி மற்றும் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இறுதியாக பென்னாகரம் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனுக்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக