தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் 24.06.2024 அன்று மாவட்டஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அனைத்து பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுகூட்டம் நடத்தப்பட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் வட்டார, பேரூராட்சி, நகராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டத்தினை கூட்டி குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்து அதன் தீர்மான நகலினை அனுப்பி வைத்திட வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதனை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருமண மண்டபம் மற்றும் கோயில்களில் திருமணம் செய்யும்போதும் வயது சான்றுபெறவேண்டும். 18 வயதிற்கு உட்பட்டவர்கள் திருமணம் செய்திட முற்படும்போது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்திடவேண்டும். வளரிளம் பருவ கருத்தறித்தல் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து குழந்தைகளிடையே சென்றடையும் வகையில் விழிப்புணர்வு நடத்தப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் இல்லம் நடத்துவோர் பதிவுச்சான்று பெற்றிருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், போதை பழக்கத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளை கண்டறிந்து குழந்தைகள் நலக்குழு மூலம் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் குழந்தை தொழிலாளர் பணி அமர்த்தப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், இளைஞர் நீதிக்குழுமம் முதன்மைநடுவர் திருமதி.கலைவாணி, குழந்தை நலக்குழு உறுப்பினர் திருமதி.பிரமிளா, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி.மகேஸ்வரி, மாவட்டகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.நா.நடராசன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக