மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 ஜூலை, 2024

மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் 225 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், எலுமிச்சனஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் 225 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (24.07.2024) வழங்கினார். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 166 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், இ-பட்டா, விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகைகளையும், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 8 விவசாயிகளுக்கு ரூ.2.51 இலட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் பாசனம், பசுந்தாள் உரம், துவரை செயல்விளக்கம் மற்றும் பண்ணைக் கருவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.2.52 இலட்சம் மதிப்பீட்டில் தக்காளி, தென்னைகன்றுகள் மற்றும் மாஞ்செடிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,680/- மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், மகளிர் திட்டம் சார்பில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 16 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.14.80 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளையும், கூட்டுறவு துறையின் சார்பில் 25 விவசாயிகளுக்கு ரூ.34.12 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்கடன்களையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் ரூ.17.50 இலட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணைகள் என மொத்தம் 225 பயனாளிகளுக்கு ரூ. 1.80 கோடி (ரூ.1,80,01,041/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட வ ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். 


இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், பெரியவர்களுக்கும், பெண்களுக்கும், பொது மக்களுக்கும், நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாகவும் இந்த நகரப்பகுதிக்கு இணையான சேவைகள், அடிப்படை வசதிகள் மலை கிராம மக்களுக்கு கிடைக்க முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்,


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் எலுமிச்சனஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எலுமிச்சனஅள்ளி, எர்ரசீகல அள்ளி, வாக்கன்கொட்டாய், செம்மனூர், நாயக்கன் கொட்டாய், முதலிப்பட்டி, சின்ன முதலிப்பட்டி, கொட்டாவூர், அளத்தியானூர், அத்திகுட்ட அள்ளி, எட்டியானூர், பொன்னுசாமிக்கொட்டாய், மூர்த்திக்கொட்டாய் உள்ளிட்ட 13 குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் சிரமங்களை போக்கும் வகையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகின்றது.


இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் விளக்க கையேடுகள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் தயாரித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு முகாம்களில் வழங்கப்படுகிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடிசை மற்றும் ஓடு வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ரூபாய் 3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், கடந்த 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் 4800 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் பணிகளை துவக்கிவைத்தார். ஏற்கனவே வசித்து வரும் தொகுப்பு வீடுகள் சிதலமடைந்து உள்ளதை சரிசெய்ய ரூபாய் 70 ஆயிரம் செலவில் புதுப்பித்துகொள்ள அரசின் மூலம் நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. ஊரகப்பகுதிகளின் பொதுமக்களின் குறைகளை களைவதற்கு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரியில் தொடங்கி வைத்தார். 


அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் 70 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது. அனுமந்தபுரம் கிராமத்தில் கடந்த வாரம் வழங்கப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பெருமக்கள் கால்நடை வளர்ப்பு பணிகளில் ஈடுபடுவோர் அரசின் திட்டங்களை பெற்று, பயன்பெற வேண்டும்.


பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பிள்ளைகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குகிறது. இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்தி மக்கள் நலமுடன் வாழ வேண்டும். 


இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள் பெறுவது தொடர்பாக இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்றைய தினம் 225 பயனாளிகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களும் மற்றும் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள மனுக்களும் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.,  அவர்கள் தெரிவித்தார்.


இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பாலக்கோடு சட்ட மன்ற உறுப்பினர் திரு.கே.பி.அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திருமதி.தி.தனப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்
திரு.முகைதீன் இப்ராகிம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.குணசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் திரு.இளவரசன், பழங்குடியினர் நல அலுவலர் திரு.கண்ணன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.சாந்தி, ஊராட்சி ஒன்றிய குழுத்துணைத்தலைவர் திரு.செல்வராஜ், வட்டாட்சியர் திரு.கோவிந்தராஜ், துணை வட்டாட்சியர்கள் திரு.பாலகிருஷ்ணன், திரு.ஞானதீபன், திரு.துரைவேல், ஊராட்சி மன்றத் தலைவர்கள் திரு.முத்துமாணிக்கம், திரு.சென்னமூர்த்தி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad