5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூலை, 2024

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சி, அவ்வை நகர் அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் A திரவம் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.07.2024) துவக்கி வைத்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:-


தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பை தடுக்க, "தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்" நமது தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 01.07.2024 முதல் 31.08.2024 வரை இரு மாத காலம் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் அனைத்து ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 1.36 இலட்சம் குழந்தைகளுக்கு ORS எனப்படும் இரண்டு உப்பு சர்க்கரைக் கரைசல் பொட்டலங்கள் மற்றும் 14 துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளது.


இந்த இரு மாதங்களில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் வயிற்றுப்போக்கினை தடுக்கும் மற்றும் சிகிச்சை முறை பற்றியும், கைகழுவும் முறை மற்றும் அதன் அவசியத்தைப் பற்றியும், 6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதன் அவசியத்ததைப் பற்றியும் உப்பு சர்க்கரை கரைசல் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும் விழிப்புனர்வு ஏற்படுத்தப்படும். 


மேலும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு "தேசிய வைட்டமின்-ஏ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின்கீழ் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம்" நமது மாவட்டத்தில் 01.07.2024 முதல் 31.07.2024 வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 1.31 இலட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.


வைட்டமின்-ஏ சத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மைக்கும் மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும் வைட்டமின்-ஏ சத்து, கண்குருடு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். வைட்டமின்-ஏ திரவம் வழங்குவதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி. அளவும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மி.லி அளவும் வழங்கப்பட உள்ளது. 


இந்த முகாம்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1336 அங்கன்வாடி மையங்களிலும் 52 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 225 துணை சுகாதார நிலையங்களிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் வழங்கப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் மிகவும் தொலைவில் உள்ள மலை கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம்  உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கும் பணிகளையும், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலங்கள், 14 துத்தநாக மாத்திரைகளை மற்றும் வைட்டமின் ஏ திரவம் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, நல்லம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் மரு.வாசுதேவன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.                  

கருத்துகள் இல்லை:

Post Top Ad