காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 61000 கனஅடி; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 ஜூலை, 2024

காவிரியில் நீர்வரத்து வினாடிக்கு 61000 கனஅடி; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 61000 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கி சாந்தி இ.ஆ.ப.அவர்கள் வேண்டுகோள்.

 

கர்நாடகா, கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் இன்று கர்நாடக அணைகளில் இருந்து 75 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 50,000 கன அடியாக இருந்தது. இன்று 20.7.2024 மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 61,000கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து 1,00,000 கன அடியாக உயர வாய்ப்புள்ளது இதனால் மெயினருவி, சினியருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


தொடர்ந்து இன்று 5-வது நாளாக ஒகேனக்கல்லில் சுற்ற்லா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது, மேலும் நீர்வரத்து அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து இன்று வருவாய்த்துறை காவல்துறை ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்புத்துறை நீர்வளத்துறை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேரில் கள ஆய்வு செய்யப்பட்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
 

ஆய்வின்போது வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் செயற்பொறியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad