பள்ளி, கல்லூரியில் தமிழ்நாடு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூலை, 2024

பள்ளி, கல்லூரியில் தமிழ்நாடு நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்.


தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகின்ற 09.07.2024 அன்று நடைபெறவுள்ளது, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்துள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் (மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்திக்குறிப்பு எண்.988, நாள்: 30.10.2021) தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே ”தமிழ்நாடு நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின்படி, தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்திப் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பெற உள்ளன.


இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற 09.07.2024 அன்று முற்பகல் 09.30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். 


கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளுக்குரிய தலைப்புகள் பின்வருமாறு :

கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு

  1. ஆட்சிமொழி தமிழ்

பேச்சுப் போட்டிக்கான தலைப்பு

  1. குமரி தந்தை மார்சல் நேசமணி
  2. தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா
  3. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி

மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ.7000/-, மூன்றாம் பரிசாக ரூ.5000/- வழங்கப்படுகிறது. இது தொடர்பில் கீழ்நிலையில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தி மாணவர்களைத் தெரிவு செய்து மாவட்ட அளவில் போட்டியில் பங்கேற்க கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் 60 மாணாக்கர்கள் வீதம் பங்குபெறும் வகையில் முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படவுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad