தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நூற்றாண்டை தமிழ்நாடு அரசு அனுசரிக்க வேண்டும்! - தியாகி சுப்பிரமணிய சிவம் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்!. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஜூலை, 2024

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நூற்றாண்டை தமிழ்நாடு அரசு அனுசரிக்க வேண்டும்! - தியாகி சுப்பிரமணிய சிவம் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்!.


தியாகி சுப்பிரமணிய சிவம் பேரவை 14- ஆம் ஆண்டு துவக்க விழா பாப்பாரப்பட்டியில் நடைபெற்றது. பேரவை அமைப்பாளர் வே.விசுவநாதன் தலைமை தாங்கி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். துணை அமைப்பாளர் ஏ.முருகேசன் வரவேற்றுப் பேசினார். திமுக நகர செயலாளர் வி.சண்முகம், காங்கிரஸ் கட்சி வட்டார பொது செயலாளர் வேடியப்பன், திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் இ.மாதன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் சின்னராஜி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சிலம்பரசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 


ஓய்வு பெற்ற கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் கல்யாணசுந்தரம், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேவராஜி, காங்கிரஸ் நிர்வாகி பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ப.மணி நன்றி கூறினார். 


விழாவையொட்டி பேரவைக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


  1. இந்த மாதம் 23- ஆம் தேதி தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு நூற்றாண்டு துவங்குகிறது. இதனையடுத்து தியாகி சுப்பிரமணிய சிவாவின் விடுதலைப் போராட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்ட தியாக வரலாற்றைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு முழுவதும் மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நினைவு நூற்றாண்டை கடைபிடிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். 
  2. சிவாவின் வரலாற்றை விளக்கும் வகையில் அரசு சார்பில் திரைப்படம் தயாரித்து திரையிடல், ஒலிபரப்ப வேண்டும். 
  3. தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு சென்னை மெரினா கடற்கரையிலும் விடுதலைப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்த நெல்லை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் முக்கிய இடத்தில் அவரது சிலைகளை நிறுவ வேண்டும். 
  4. சிவா தனது இறுதிக் காலத்தில் வாழ்ந்து மறைந்த பாப்பாரப்பட்டியில் அவரது நினைவிடத்தில்  அவரது நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த தேசியவாதி சின்னமுத்து முதலியார் மற்றும் பட்டாளத்து சாமியார் ஆகியோர் சமாதி உள்ளது. அவற்றை புதுப்பித்து அவர்களின் புகைப்படம் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெறச் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் அவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில் அரசு சார்பில் மரியாதை செலுத்த வேண்டும். 
  5. பென்னாகரம் அரசுக் கலை அறிவியல் கல்லூரிக்கு தியாகி சுப்பிரமணிய சிவாவின் பெயரைச் சூட்ட வேண்டும். 
  6. மகாகவி பாரதியாரின் ஆலோசனைப்படி தியாகி சுப்பிரமணிய சிவா வடிவமைத்த பாரதமாதா சிலை, கடிதங்கள், புகைப்படங்கள், நூல்கள் மற்றும் நினைவுப் பொருட்களை  சின்னமுத்து முதலியார் உறவினர்கள் மற்றும் அதனை வைத்துள்ளவர்கள் இடம் கேட்டுப் பெற்று அரசு பொறுப்பில் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.


என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

Post Top Ad