“மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஊரகப் பகுதிகளிலும் விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் துவக்கிவைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஜூலை, 2024

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஊரகப் பகுதிகளிலும் விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் துவக்கிவைத்தார்.


“மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஊரகப் பகுதிகளிலும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில் 2,500 முகாம்களின் மூலம் 15 அரசுத் துறைகளின் வாயிலாக 44 சேவைகளை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.7.2024) தருமபுரி, பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில் 2,500 முகாம்களின் மூலம் 15 அரசுத் துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.


“மக்களுடன் முதல்வர்” திட்டம் அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் செயல்படுத்திட சிறப்பு முகாம்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில் தொடங்கி வைத்தார்.


“மக்களுடன் முதல்வர்” என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் எரிசக்தித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, காவல்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை,  கூட்டுறவுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புறங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. 


அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முதற்கட்டமாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 8.74 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.


ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் விரிவாக்கம் நகரப்பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை அடுத்து, அதனை தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்திட திட்டமிட்டு, 11-7-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 4.7.2024 அன்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி, “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஊரகப் பகுதிகளிலும் விரிவுபடுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் தருமபுரியில் தொடங்கி வைத்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.


தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு காப்பீட்டிற்கான அட்டைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார். 


ஊரகப்பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் “மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத் துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, எரிசக்தித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட இன்றையதினமே அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, முகாம்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ.மணி, திரு. டி.எம். செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜி.கே.மணி, திரு.எஸ்.பி. வெங்கடேஸ்வரன், திரு. ஆர். ராஜேந்திரன், முதல்வரின் முகவரி துறை  சிறப்பு அலுவலர் திரு. த. மோகன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி. சாந்தி, இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி யசோதா மதிவாணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad