கலங்கரை விளக்கம் குடிபோதை மறுவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஜூலை, 2024

கலங்கரை விளக்கம் குடிபோதை மறுவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி பகுதியில் இயங்கிவரும் கலங்கரை விளக்கம் குடிபோதை மறுவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி பகுதியில் இயங்கிவரும் கலங்கரை விளக்கம் குடிபோதை மறுவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் 16.07.2024 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இம்மையம் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் நிதியுதவி பெற்று, கடந்த 16 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இம்மையம் 15 குடிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அனுமதி பெற்றுள்ளதோடு, இந்த ஆய்வின்போது 12 குடிநோயாளிகள் சிகிச்சையிலும் இருந்தனர்.


அனைவரிடத்திலும் நேரடி விசாரணை செய்யப்பட்டு, அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் வழங்கப்படும் உணவு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார். ஒரு குடிநோயாளிக்கு அதிகபட்சமாக 30 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தனர். சமையலறை, உணவருந்தும் கூடம். கழிவறை குளியலறை ஆய்வு செய்யப்பட்டது. 


காலையில் வழங்கப்பட்ட உணவு மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. இம்மையம் செயல்படும் இடம் மிகவும் குறுகிய சந்தில் போக்குவரத்து நெரிசலான இடத்தில் அமைந்துள்ளது. எனவே தற்போது செயல்படும் இடத்தினை மாற்றி புதிதாக இடம் பார்க்கவும், கூடுதலான குடிநோயாளிகள் சேர்க்க நடடிவக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


இதனை தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் தொப்பையாறு அணையின் மேற்பகுதியில் தாங்கு சுவர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார். பின்னர், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், சிவாடி ஊராட்சி நபார்டு திட்டத்தின் கீழ் பாகல அள்ளி முதல் முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் காட்டு சாலை வரை ரூ.4.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வந்த சாலை பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை குறிப்பிட்ட கால வரைக்குள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


இந்த ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.நா.நடராசன், உதவி இயக்குநர் (நெடுஞ்சாலைகள்) திரு.ஜெய்சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கலைவாணி, திருமதி.சத்யா, திரு.லோகநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad