போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 ஜூலை, 2024

போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக துறை அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (29.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறைகளை சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கள்ளச்சாரயம் கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது. 


கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் தொடர்பான புகாரினை 63690-28922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.


போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை தடுக்கும் வகையில், மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில் மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதைப்பொருட்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழித்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், உதவி ஆணையர் (ஆயம்) திருமதி.நர்மதா, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) திருமதி.மகேஸ்வரி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.சிவக்குமார், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் திருமதி.பானுசுஜாதா வட்டாட்சியர்கள் உட்பட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad