மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் ஊரகப் பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை துவக்கி வைத்து, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள் என மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் ஆய்வின் போது தகவல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (11.07.2024) தருமபுரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்களுடன் இன்று (10.07.2024) பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா நடைபெறும் இடத்தையும், முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மற்றும் அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகச் சேர்த்திட மக்களை நாடிச் செல்லும் தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான ”மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கான முகாமினை மாநில அளவில் துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறவுள்ளார். அதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊரகம் பகுதிகளில் நாளை (11.07.2024) முதல் 04.09.2024 வரை மொத்தம் 70 முகாம்கள் நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில் எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை/ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய 15 அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை முகாம்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.
முடிவுற்ற திட்டப்பணிகள் - தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உயர்கல்வித்துறை, பால்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சித்துறை, ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை, பேரூராட்சிகள் துறை, வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்க உள்ளார்.
அரசு நலத்திட்ட உதவிகள் - கூட்டுறவுத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கவுள்ளார்கள்.
தொடர்ந்து, மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக தற்போது இயங்கி வரும் பேருந்துகளுக்குப் பதிலாக 20 புதிய நகர பேருந்துகளை கொடியசைத்துத் துவக்கி வைத்தும், தருமபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க உள்ளார். இவ்விழாவில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வரின் முகவரி சிறப்பு அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் திரு.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, தனித்துணை ஆட்சியர் திருமதி.தனப்பிரியா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் திரு.செல்வம், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, அனைத்து துறை முதல்நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக