தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பி.அக்ரஹாரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பி.அக்ரஹாரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் தருமபுரி மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 11-ஆம் வகுப்பு பயிலும் 12,500 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் 02.08.2024 அன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமைவகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசால் பேருந்து வசதி இல்லா குக்கிராமப் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் தடைபடாமல் இருக்கவும், அவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்கவும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 5,783 மாணவர்களுக்கு தலா ரூ.4,900/- மதிப்பிலும், 6,717 மாணவிகளுக்கு தலா ரூ.4,760/- மதிப்பிலும் என மொத்தம் ரூபாய் 6 கோடியே 3 இலட்சம் மதிப்பீட்டில் 12,500 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் 2024-2025 கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயணச்சலுகைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இதன் மூலம் இன்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். அவர் வழியில் சிறப்பான ஆட்சி செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிதி உதவியினை உயர்கல்விக்கு உத்திரவாதமாக மாணவிகள் பயன்படுத்தி கொண்டு, சிறந்த கல்வியை கற்பதோடு, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் தங்களை தயார் படுத்திக்கொண்டு உயர்ந்த இடத்தை மாணவிகள் அனைவரும் எட்டவும், உயர்கல்வி என்பதை உங்கள் இலக்காகவும் கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும்.
மாணவர்களின் நல்ல எதிர்காலத்திற்கு அடிப்படை காரணியாக உள்ளது கல்வி. ஆசிரியர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளையும், கற்பிக்கின்ற பாடங்களையும் மாணவர்கள் முழுமையாக புரிந்து, கல்வி கற்றுகொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மாணவர்களின் கல்வி அறிவு உயர்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
மாணவ, மாணவியர்களின் நலனுக்கென தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி முழுமையாக பள்ளி மற்றும் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், மாவட்ட கல்வி ஆய்வாளர் திரு.பொன்னுசாமி, தலைமையாசிரியர் திரு.வையாபுரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் திரு.குமரன், திரு.மாது, ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.அலமேலு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக