கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 80,000 கன அடியாக சரிந்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீற்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவுகளும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவானது நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடியாக இருந்தது. பின்னர் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக சரியத் தொடங்கி மாலை நிலவரப்படி விநாடிக்கு 80,000 கன அடியாக தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் சுமார் 50,000 கன அடி வீதம் வரை நீர்வரத்து குறைந்ததால், வெள்ளப்பெருக்கின் போது மூழ்கியிருந்த அருவிகள் தற்போது வெளியே தெரிய தொடங்கியுள்ளது.
இருப்பினும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அதன் நீர்த்தேக்கத்தின் காரணமாக ஒகேனக்கல் கரையோரப் பகுதிகள் ஆற்றின் கரையோரப் பகுதிகள் என தொடர்ந்து நீர் தேக்கமடைந்துள்ளது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விக்கப்பட்டு இருந்த தடை தொடர்ந்து 19 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்தினை பொறுத்து காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகள் அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ள நிலையில் அதனை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக