10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எஸ்.ஏ.5 இலளிகம் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் மருத்துவ முகாமினையும், தருமபுரி நகராட்சி, நெசவாளர் காலனி, லூம்வேர்ல்ட் விற்பனை வளாத்தில் கைத்தறி ஜவுளிகளின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.08.2024) குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார்.
1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும், கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, 10-வது தேசிய கைத்தறி தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் இலளிகத்தில் உள்ள எஸ்.ஏ.5 இலளிகம் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாம் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது.
இவ்விழாவில் 200–க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இம்மருத்துவ முகாமில் கைத்தறித் துறையால் நெசவாளர்களுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் தொடர்பான கையேடு மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டதோடு, மூத்த கைத்தறி நெசவாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையையும், மேலும், 5 பயனாளிகளுக்கு ரூ.5.28 இலட்சம் மதிப்பீட்டில் கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத் தொகைகளையும், கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 4 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1200/- வீதம் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் என மொத்தம் 10 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.8.78 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
பின்னர், தருமபுரி நகராட்சி, நெசவாளர் காலனியில் உள்ள லூம்வேர்ல்ட் விற்பனை வளாகத்தில், கைத்தறி ஜவுளிகளின் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, கண்காட்சியினை பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது, சேலம் சரக கைத்தறி துறை உதவி அமலாக்க அலுவலர் திருமதி.ந.ஸ்ரீ.விஜயலட்சுமி, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, சேலம் சரகத்தைச் சார்ந்த கைத்தறி துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக