தருமபுரி ஊராட்சி ஒன்றியம், அதகப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி.சாந்தி.இ.ஆ.ப, அவர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் :- பள்ளியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் பள்ளி மேலாண்மை குழுவினர் சிறப்பாக செயலாற்ற வேண்டும். பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ள வேண்டும்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் வழங்கப்படும் காலை உணவு குறித்து தொடர்ந்துகண்காணிக்க வேண்டும். மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் அவர்களின் கற்றல் திறன்கள், குறித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் வருகை சீராக உள்ளதா என்பதையும் பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு ஆலவச கல்வி உரிமைச்சட்ட விதிகள் 2011ன் படி அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022 ஆம் ஆண்டு முதல் பள்ளி மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு. உறுப்பினர்களின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், தமிழக அரசு தற்போது மீண்டும் பள்ளி மேலாண்மை குழுவை மறு கட்டமைப்பு செய்யும் நிகழ்வுகளை நடத்த ஆணை பிறப்பித்துள்ளது.
இதன்படி தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் கட்டமாக 50 சதவித அரசு தொடக்கப் பள்ளிகளில் அதாவது 407 தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 50 சதவித 404 தொடக்கப் பள்ளிகளில் 17.8.2024 (சனிக்கிழமை) 220 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 24,8.2024 (சனிக்கிழமை), 317 நடுநிலைப் பள்ளிகளில் 31.8.2024 (சனிக்கிழமை) பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்வுகள் நடைபெறும்.
இந்த நிகழ்வுகளில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக் கல்வித் துறையை சார்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் இந்த கூட்டங்களில் பங்கேற்பார்கள் என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. ஜோதி சந்திரா, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) திருமதி.மான்விழி, மகளிர் திட்ட ஆணை இயக்குனர் திரு முகமது நசீர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் திரு.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக