இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் திரு. பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, திரு.மனோகரன், திருமதி.வேடம்மாள், திரு.இன்பசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதி சந்திரா, மாவட்ட சமூக அலுவலர் திருமதி.ச.பவித்ரா, வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் திருமதி.பா.சிந்தியா செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ராமஜெயம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருமதி.மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், ஒன்றிய குழு தலைவர் திருமதி.உண்ணாமலை குணசேகரன், வட்டாட்சியர் திருமதி.வள்ளி, பேரூராட்சி தலைவர் திரு.எம்.மாரி, பாப்பிரெட்டிப்பட்டி கலை (ம) அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.ரவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் பயிலும், 7,033 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1000/- க்கான பற்று அட்டைகளை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில், தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை இன்று (09.08.2024) துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் பயிலும், 7,033 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1000/- க்கான பற்று அட்டைகளை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி ஆகியோர் முன்னிலையில் இன்று வழங்கினார்.
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியறிவும் பொருளாதார சுதந்திரமும் பெண்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்து, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்க்கல்வி சேர்க்கை மிகக்குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டும் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கும் "புதுமைப் பெண் திட்டத்தை கடந்த 5.9.2022 அன்று துவக்கி வைத்தார்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரிகளில் பயிலும் சுமார் 3.28 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் மாணவிகள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 16,842 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்கென தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டமானது மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதையடுத்து, 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்" பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது போல், அரசு பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும், ”தமிழ்ப் புதல்வன்” எனும் மாபெரும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள், பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
இதனைதொடர்ந்து, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (09.08.2024) கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் பாப்பிரெட்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துவக்கி வைக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும், 7033 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிதி உதவி வழங்கும் விதமாக, இவ்விழாவில் 358 மாணவர்களுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்பது மிகச்சிறந்த உதவித்தொகையாகும். மாணவர்களுக்கான எதிர்கால வாழ்விற்கான ஒரு முதலீடாக இருக்க வேண்டும் என்று இத்திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி உள்ளார். இந்நிதி உதவியை மாணவர்கள் சேமிப்பாக வைத்து, மேலும் உயர்கல்விக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்குவது, கல்வி சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி தங்களின் உயர்கல்விக்கு உத்திரவாதமாக இந்நிதியை பயன்படுத்த வேண்டும். அறிவு சார்ந்த சமுதாயமாக தாம் உருவாகுவதற்கு இந்நிதியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்நிதியை கொண்டு ஏதேனும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான நல்ல புத்தகங்களை வாங்கி படிக்கலாம். உங்களுக்கு ஒரு வெல்கம் கிட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வழிகாட்டுதல் கையேடும், பொருளாதாரம் சம்பந்தமான குறிப்புகளுடன் கூடிய புத்தகமும் உள்ளது. இவற்றை நீங்கள் முழுமையாக படித்து பயன்பெற வேண்டும். மாணவர்கள் சிறந்த கல்வியை கற்றால் அவர்கள் சுயமாக தொழில் செய்து முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பாகவும், வேலைவாய்ப்பு பெறவும் உறுதுணையாக அமையும். மாணவர்கள் தங்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை உருவாக்கி கொள்ள வேண்டும். நீங்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம். எளிதில் வெற்றி அடையலாம்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் முத்தழிறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொற்கரங்களால் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியுடன் ரூபாய் 1928 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக தொடங்கிவைக்கப்ட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 2784 குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவர் வழியில் நல்லாட்சி செலுத்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2ம் கட்டம் ரூபாய் 7 ஆயிரத்து 890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவித்து, இதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூலம் தருமபுரி மாவட்டத்திலுள்ள 2828 ஊரகக் குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயணச்சலுகைகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இதன் மூலம் இன்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதேபோல், தருமபுரி மாவட்ட மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் ரூபாய் 1000 நிதி உதவியினை உயர்கல்விக்கு உத்திரவாதமாக நீங்கள் பயன்படுத்தி கொண்டு, உயர்ந்த இடத்தை அனைவரும் எட்ட வேண்டும், உயர்கல்வி என்பதை உங்கள் இலக்காக கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக