தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட ONE STOP CRISIS TEAM குழுவினர் 02.09.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத்தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தொடர்பாக வருவாய்த்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தொழிலாளர் நலத்துறை, சமூகபாதுகாப்பு துறை. காவல்துறை ஆகிய துறைகளை சார்ந்த உறப்பினர்கள் மற்றும் துறை சாரா உறுப்பினர்களுடன் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இச்சிறப்பாய்வானது வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்பட்டு அவரை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் மூலமாக குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தைத் தொழிலாளரை பணியமர்த்திய அந்த கடையின் உரிமையாளர் மீது குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் -1986 ன் கீழ் உரிய நீதிமன்ற மேல்நடவடிக்கை தொடரப்பட்டது.
மேலும், இந்த குழு தருமபுரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆய்வு செய்த போது பாசிமணி மற்றும் ஊசிமணிகள் விற்பனை செய்து கொண்டிருந்த 3 குழந்தைகளை மீட்டு, அக்குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ONE STOP CRISIS TEAM குழுவினர் திடீராய்வு மற்றும் சிறப்பாய்வுகள் தொடர்ந்து மேற்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிணங்க, இக்குழுவினர் மூலம் திடீராய்வு மற்றும் சிறப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் -1986 ன் கீழ் 14 வயதுக்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் எந்த வகையான நிறுவனத்திலும் பணிக்கமர்த்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 14 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் கடைகள் மற்றம் உணவு நிறுவனங்கள் போன்ற அபாயகரமற்ற தொழில்களில் பணிக்கு அமர்த்தும் போது அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் உரிய முறையில் தகவல் அளிப்பதுடன், அவரது விபரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அவர்களுடைய மொத்த வேலைநேரம் 6 மணி நேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுவதுடன், உதவி ஆய்வருக்கு தகவல் அளிக்காத மற்றும் உரிய விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்காத நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அபராதத்தொகையாக ரூ.10,000/- விதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் /மாவட்ட நிர்வாக நடுவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
குழந்தைத்தொழிலாளர்களை பணிக்கமர்த்தினால் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் -1986 ன் கீழ் அபராதத்தொகையாக ரூ.20,000/- மற்றும் ஓராண்டு கால சிறைத்தண்டனையும் நீதிமன்றம் மூலம் வழங்கப்படும் எனவும், தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் யாரேனும் பணிபுரிவது காணப்பட்டால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு அல்லது தொழிலாளர் துறை அலுவலர்களுக்கு அல்லது தருமபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக