தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து, 2024 ஆம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழாவினை மதுராபாய் திருமண மஹாலில் வருகின்ற 04.10.2024 முதல் 14.10.2024 வரை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்கள் மற்றும் புத்தக திருவிழா பொறுப்பாளர்களுடன்ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 19.09.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றமடைய, அவர்களிடையே வாசிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. அவ்வகையில் மாவட்ட நிருவாகம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்களிடையேயும் புத்தகத் திருவிழா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, அங்கிருந்தும் மாணவர்கள் புத்தகத் திருவிழாவைக் காண்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
குறிப்பாக, வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், பெண்கல்வி பற்றியும், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனைச் சார்ந்து, கல்லூரி மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும், கல்லூரியிலும் கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், விவாத மேடை, பட்டிமன்றம் போன்ற போட்டிகளை நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பாளர்கள், நூல் விற்பனையாளர்கள் பங்கேற்று இலக்கியம், வரலாறு, மானுடவியல், அரசியல், சூழலியல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பற்றிய புத்தகங்களும், சிறுவர்களுக்கான நூல்களும், முன்னணி எழுத்தாளர்களின் புனைவு இலக்கியங்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வேண்டிய நூல்களும், போட்டித் தேர்வுகளுக்கான நூல்களையும் இடம்பெற செய்ய உள்ளனர். இதில் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதணைகளை விளக்கிடும் வகையில் சிறப்பான கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்படுகின்றன.
மேலும் புத்தகத் திருவிழாவில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்றோர்கள், சான்றோர்கள், அறிவுசார் பெருமக்கள், அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ் குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட வருவாய் அலுவலர் (தனி) சிப்காட் திருமதி.பூங்கோதை, தருமபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் மரு.இரா.செந்தில், தலைவர் திரு.சிசுபாலன், பொருளாளர் திரு.எம்.கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் திரு.தங்கமணி, மாவட்ட நூலக அலுவலர் திருமதி.கோகிலவாணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக