தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (26.09.2024) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக கடந்த 10.09.2024 அன்று முதல் தொடர்ந்து நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்திலிருந்து மொத்தம் 19994 வீரர் வீராங்கனைகள் பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் ஆண்கள் 11485, பெண்கள் 3842 என மொத்தம் 15327 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் 53 வகையான விளையாட்டுக்களில் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கம், அரூர் சிறு விளையாட்டரங்கம், செந்தில் மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் மெட்ரிக் பள்ளி, பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செல்லியம்பட்டி தூய இருதயர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 3 ஆயிரமும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரமும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் ஒரு ஆயிரமும் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் வருகின்ற 04.10.2024 அன்று முதல் நடைபெறவுள்ள மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
மேலும், பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளிலிருந்தும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர் வீராங்கனைகள் தகுந்த உடற்கல்வி இயக்குநர்கள் ஆசிரியர்கள் பாதுகாப்புடன் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அழைத்து செல்லப்பட உள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 1.00 இலட்சம், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 75000/. மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூபாய் 50000/-, குழு போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 75000/-, இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 50000/-, மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூபாய் 25000/- பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் மொத்த பரிசுத்தொகை ரூபாய் 37 கோடி ஆகும். மாநில அளவிலான போட்டிகள் 21 நாட்கள், சென்னை, மதுரை, கோவை. செங்கல்பட்டு, திருச்சி ஆகிய 5 நகரங்களில் 19 இடங்களில் நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்திலிருந்து 718 வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட முதன்மை கல்வி திருமதி.ஜோதிசந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.சாந்தி உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக