தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு, மோரனஅள்ளி காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் வரும் யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அண்ணமலைஅள்ளி காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை வெள்ளிசந்தை, கருக்கனஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, தண்டுகாரனஅள்ளி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிந்தது.
அந்த ஒற்றை யானை நேற்று காலை பாலக்கோடு அருகே உள்ள செங்கோடப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி துரைசாமி என்பவரையும், இரவு சாமியார் நகரில் விவசாயி பழனி என்பவரையும் தாக்கி கொன்றது. இதனால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்தனர். இந்த நிலையில் அந்த யானை ஆக்ரோஷமாக ஈச்சம்பள்ளம் பகுதியில் சுற்றித்திரிவதை அறிந்த பாலக்கோடு வனசரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறை குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அங்கு சுற்றித்திரிந்த ஒற்றை யானையை விரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இன்று மாலை அந்த யானை கேசர்குழி காப்புக்காட்டுக்கு விரட்டி அடித்தனர். இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக