நகராட்சி துவக்கப்பள்ளியில் 15.09.2024 அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது, பங்குபெற மாணவர்களுக்கு அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 செப்டம்பர், 2024

நகராட்சி துவக்கப்பள்ளியில் 15.09.2024 அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது, பங்குபெற மாணவர்களுக்கு அழைப்பு.


தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு அப்பாவு நகரில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் 15.09.2024 அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது.


கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, 2024-2025 ஆம் நிதியாண்டில்   5-8 / 9-12 / 13-16 வயது வகை சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும்  ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி, 9-12 / 13-16 ஆகிய வயது பிரிவில் மாவட்ட கலைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் பாரட்டுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 


தருமபுரி மாவட்டத்தில், அப்பாவு நகரில் உள்ள, நகராட்சி துவக்கப்பள்ளியில், 15.09.2024 அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. காலை 9.15 மணிக்கு முன்பதிவு ஆரம்பமாகிறது. குரலிசைப் போட்டி, பரதநாட்டிய போட்டி, நாட்டுப்புற நடனப் போட்டி, ஓவியப்போட்டி நடைபெறும். குரலிசை போட்டியில், கர்நாடக இசை பாடல்கள், தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும்.   மேற்கத்திய  இசை,  திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு  அனுமதியில்லை.  குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை பாட அனுமதிக்கப்படும். கிராமிய நடனப்போட்டியில், தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம்.  


முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென் டிரைவ் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.  குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.


பரதநாட்டியம் போட்டியில், பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும், திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள் / பென் டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.  குறைந்த பட்சம் 3 நிமிடங்கள், அதிக பட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.


ஓவியப் போட்டியில், 40x30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் , ஆயில் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். 


ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைககள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும் பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். 


மேலும் விவரம் வேண்டுவோர் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை 0427 2386197 அல்லது 9944457244 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad