தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையில் தேசிய அளவிலான சொற்பொழிவு பயிற்சி பட்டறை 'இந்திய இலக்கியம்: கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் - ஓர் மீள்பார்வை' என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் டெல்லி பல்கலைக்கழக சாகித் பகத்சிங் கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் முனைவர் வரதராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
இவர் தனது உரையில் இந்திய இலக்கியம் கடந்து வந்துள்ள பாதையை பற்றியும், இவ்விலக்கியத்தில் பல்வேறு சிறப்புக்குரிய எழுத்தாளர்களான ஆர் கே நாராயணன், ராஜாராம், முல்க்ராஜ் ஆனந்த் போன்ற ஆண் எழுத்தாளர்களின் பங்களிப்பை பற்றியும் சசி டேஷ் பாண்டே, கமலா தாஸ், ஜும்பாலகிரி போன்ற தற்காலத்திய பெண் எழுத்தாளர்கள் உடைய பங்களிப்பு பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் பொட்டி ஸ்ரீ ராமு மற்றும் திரு.சங்கரலிங்கனார் போன்றோர் மொழிவாரிய மாநில அமைப்பிற்கு செய்த உயிர் தியாகம் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்திய இலக்கியமானது இந்திய ஆங்கில இலக்கியம் மற்றும் இந்திய மண்டல அளவிலான இலக்கியம் என்ற வகையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது நிகழ்வில் அரூர், அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் சக்தி குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெளிநாட்டு வாழ் இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் இலக்கிய பங்களிப்பு என்ன என்பதையும் இனிவரும் காலங்களில் இந்திய இலக்கியமானது பெற இருக்கக்கூடிய பரிணாமங்களான அறிவியல் புதினம், தொழில்நுட்ப புதினம் மற்றும் பல்வேறு உருமாற்றங்களை பற்றியும் ஓர் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய உரையை நிகழ்த்தினார். முன்னதாக இந்த நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.
ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் சி. கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார். முன்னதாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கிருத்திகா நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, இப்ப பயிற்சி பட்டறைக்கான நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். இறுதியாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆராய்ச்சி மாணவன் திரு பழனிச்சாமி நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வை இரண்டாம் ஆண்டு மாணவிகள் செல்வி நேகா மற்றும் செல்வி காவியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணாக்கர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக