தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடத்துவது தொடர்பான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.09.2024) நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக 2024-25ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 10.09.2024 முதல் 24.09.2024 வரை தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள், பொது ஆகிய பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு தலா ரூ.3000.00, இரண்டாமிடம் பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு தலா ரூ.2000.00, மூன்றாமிடம் பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு தலா ரூ.1000.00 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்ள படிப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு அசல், மாற்றுத்திறனாளிகளில் பிரிவில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார் கார்டு அசல், பொதுப்பிரிவில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஆதார் கார்டு அசல், இருப்பிடச்சான்றிதழ் அசல், அரசு பணியாளர்கள் பிரிவு போட்டியாளர்கள் பணிபுரியும் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு அசல் ஆகியவற்றை போட்டிகள் நடைபெறும் நாளன்று உடன் எடுத்து வருதல் வேண்டும். மேற்காண்ட சான்றிதழ்கள் சமர்பிக்காதவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எனவே முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்துள்ள விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதலமைச்சர் கோப்பை போட்டிகள் சிறப்பாக நடத்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, கல்வியல் இணை இயக்குநர் திருமதி.சிந்தியாசெல்வி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.தே.சாந்தி, அமைச்சூர் கபாடி சங்க தலைவர் திரு.பாஸ்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக