தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கால்நடை வளர்ப்பு விவசாயத்தை நம்பியிருக்கும் பெரும்பாலான குடும்பங்களுக்கு கூடுதல் வருமானமும் பல நிலமற்ற குடும்பங்களுக்கு பிரதான வருமானம் அளிக்கும் தொழிலாகவும் விளங்குகிறது. எந்த ஒரு திட்டத்தை வடிமைக்கவும் மற்றும் அத்திட்டத்தை முறையாக திட்டமிடுவதற்கும் ஒரு அரசுக்கு நிர்வாக மற்றும் புள்ளியியல் தொடர்பான தகவல்கள் தேவைப்படுகிறது.
இவ்வரிசையில் கால்நடை கணக்கெடுப்பு என்பது கால்நடை வளத்தை மேம்படுத்த ஒரு முக்கிய புள்ளியியல் ஆதாரமாக விளங்குகிறது. நம் நாட்டில் 1919-ல் தொடங்கி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாக இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளது. தற்பொழுது நாடு முழுவதும் எடுக்கப்படும் 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணி தருமபுரி மாவட்டத்தில் அக்டோபர்-2024 மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி-2025 வரை 4 மாதங்கள் நடைபெற உள்ளது. கால்நடைகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கு எடுத்தால் தான் கால்நடை பராமரிப்பிற்கான எதிர்கால திட்டங்களை தீட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவை சிறப்பாக செய்ய இயலும். கால்நடைகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தீவனம், கால்நடை நோய் தடுப்பூசி, கால்நடை மருத்துகள், உற்பத்தி போன்றவற்றை தட்டுப்பாடு இல்லாமல் தயாரிக்க கால்நடைகள் எண்ணிக்கை முக்கியம். வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கால்நடைகளில் இருந்து கிடைக்கும் பால், முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய கால்நடை கணக்கெடுப்பு மிக மிகமுக்கியமானதாகும். பசு, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, குதிரை, மட்டக்குதிரை, கழுதை, ஒட்டகம், பன்றி, நாய், முயல், யானை மற்றும் கோழியினங்கள் (வாத்து, வான்கோழி உட்பட) கணக்கெடுக்கப்படும்.
இக்கணக்கெடுப்பு பணி அனைத்து கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் நடைபெறவுள்ளது. கால்நடை உள்ள மற்றும் இல்லாத அனைத்து குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பசு மடங்களில் விபரங்கள் சேகரிக்கப்படும். குடும்பத்தலைவரின் பெயர், முகவரி, ஆதார், தொலைபேசி எண்., கல்வித் தகுதி, தொழில், நிலத்தின் பரப்பளவு, இனம், வயது, பாலினம் வாரியாக கால்நடை எண்ணிக்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். இக்கால்நடை கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ள நமது மாவட்டத்தில் 158 கணக்கெடுப்பாளர்களும் மற்றும் 33 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கால்நடை கணக்கெடுப்பாளர்கள் உங்கள் பகுதியில் விவரங்கள் சேகரிக்க வரும் போது அவர்கள் கேட்கும் உரிய விவரங்களை அளித்து கால்நடை கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் மரு.ரமேஷ், கால்நடை மருத்துவர்கள் மரு.மாயக்கண்ணன், மரு.திருப்பதி, மரு.சுதாமதி மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக