மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 466 மனுக்கள் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 அக்டோபர், 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 466 மனுக்கள் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று பெற்றுகொண்டார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (21.10.2024) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். 


இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 466 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் கடந்த 04.10.2024 அன்று தொடங்கப்பட்ட மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 11 வீரர் வீராங்கனைகள் 5 பிரிவுகளில் மொத்த பரிசுத்தொகையாக ரூபாய் 8 இலட்சத்து 25 ஆயிரம் மற்றும் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்கள். இன்று நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து. வாழ்த்துபெற்றனர்.


மேலும், இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தேசிய தன்னார்வ ரத்ததான நாள் 2024-ஐ முன்னிட்டு, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம்கள் நடத்திக் கொடுத்த 32 அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கி. சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ஜோதிசந்திரா, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. அமுதவல்லி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.தே.சாந்தி அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad