இன்று 18.10.2024 வெள்ளிக்கிழமை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் திருமதி.ச.சுகன்யா தலைமையிலான அலுவலர்கள் தருமபுரி ஒன்றியம் குப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது குப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பலாமரத்துக்கொட்டாய் கிராமத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் பீகார் மாநிலத் தொழிலாளர்களின் பள்ளி வயதுக் குழந்தைகள் 8 பேர் இதுவரை எந்த பள்ளியிலும் சேராமல் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அக்குழந்தைகள் அனைவரும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 4ன் அடிப்படையில் அவர்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பலாமரத்துக்கொட்டாய் பள்ளியில் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்பில் நேரடியாக சேர்க்கப்பட்டனர்.
இக்குழந்தைகளில் மான்ஸி குமாரி, ராசி குமாரி, துள்சி குமாரி மற்றும் ஆஷிஷ் குமார் ஆகியோர் முதல் வகுப்பிலும், சோனாலி குமாரி, விஜயகுமார் ஆகிய குழந்தைகள் இரண்டாம் வகுப்பிலும், நூரி குமாரி மற்றும் மம்தா குமாரி ஆகிய குழந்தைகள் மூன்றாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.
இக்குழந்தைகள் அனைவருக்கும் உடனடியாக தமிழக அரசின் விலையில்லா பாடநூல்கள், சீருடைகள், நோட்டுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கையேடுகள் வழங்கப்பட்டன. இக்குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பி வைக்க குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இணை இயக்குனர் திருமதி ச.சுகன்யா அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ஐ.ஜோதி சந்திரா, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), திருமதி. தென்றல், வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு.ஜீவா, திரு.நாசர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.முல்லைவேந்தன், பள்ளித் துணை ஆய்வாளர் திரு.பொன்னுசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சுரேஷ் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு.முனியப்பன், திரு.அருண்குமார் பலாமரத்துக்கொட்டாய் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி.மஞ்சுளா, ஆசிரியர் திரு.ஆனந்த் தன்னார்வலர்கள் திருமதி.மணிமேகலை மற்றும் திருமதி.கனகா ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக