தர்மபுரியில் தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கான, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மேற்பார்வையாளர் பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 அக்டோபர், 2024

தர்மபுரியில் தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கான, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மேற்பார்வையாளர் பயிற்சி.

 

தர்மபுரி  மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, ஐ.ஏ.எஸ்., அவர்கள் ஆலோசனைப்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பண்டிகை கால தற்காலிக இனிப்பு, காரம்  தயாரிப்பு செய்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், மேற்பார்வையாளர், தயாரிப்பு பணியாளர்கள், மாஸ்டர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ்கான அடிப்படை  பயிற்சி தர்மபுரி ‌ராமாபோடிங் கே.ஆர்.கே. மஹால் வளாகத்தில் நடைபெற்றது.


தர்மபுரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. குமணன்  வரவேற்புடன், தர்மபுரி ஹோட்டல் மற்றும் பேக்கரி சங்க  செயலாளர் திரு.வேணுகோபால், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன்,  உள்ளிட்டோர் முன்னிலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமையில்  விழிப்புணர்வு மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி,   நடைபெற்றது.


நிகழ்வில் மாவட்ட நியமன அலுவலர்  தன் தலைமை உரையில், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றுகள் இல்லாமல் உணவுப் பொருட்கள், தீபாவளி பலகாரங்கள் இனிப்பு  காரம் தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது , விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  


மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்கள், பேக்கரிகள், தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள், விற்பனையாளர்கள்  தற்காலிக  மற்றும் தனியார் மண்டபங்களில் வாடகை எடுத்து இனிப்பு, பலகாரம்  தயாரிப்பு செய்து விற்பனை செய்யக் கூடியவர்கள் என அனைவரும் உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெற்று உரிய உணவு பாதுகாப்பு உரிமச் சான்றிதழ் பெற்று வணிகம் செய்தல் வேண்டும் எனவும், உணவு பொருட்கள், உணவு, இனிப்பு மற்றும் காரப் பலகார வகைகள் செய்யும் பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிப்புடன் சுற்றுப்புற சுத்தம் பராமரித்தல் அவசியம், தயாரிப்பிடங்கள், இருப்பு வைக்கும் இடங்களில் தேவையற்ற பூச்சிகள் அண்டாமல் கண்காணிக்கவும், மேலும் தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் மூலப் பொருட்கள் தரமானதாகவும் உரிய காலாவதி  நடைமுறை பின்பற்றக்கூடிய பொருள்களாகவும் இருத்தல் அவசியமாகும். தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்ட குடிநீராக இருத்தல் அவசியம். 


உணவுப் பொருட்கள், இனிப்பு கார தயாரிப்பில் தரமற்ற பொருட்களோ, நிறமூட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சேர்ப்பதோ, பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துவதோ, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் உபயோகப்படுத்துவதோ, அச்சிடப்பட்ட பழைய செய்தித்தாள்களில் காட்சிப்படுத்துவதோ பொட்டலம் இடுவதோ, விநியோகிப்பதோ கூடாது என எச்சரிக்கை செய்தார். 

சமையல் எண்ணெய் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாமலும், உபயோகப்படுத்தி மீதமாகும் எண்ணெயை உணவு பாதுகாப்பு துறை அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய்) முகவர் இடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ள விழிப்புணர்வு செய்தார்.


காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு  ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால்,  ஒவ்வொரு உணவு வணிக நிறுவனங்களிலும் கண்டிப்பாக  முறையான பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர் ஒருவர் இருத்தல் அவசியம் என உணவு பாதுகாப்பு விதிகள் வகுக்க பட்டுள்ளதால், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது என தெளிவுபடுத்தினார். தற்போது தற்காலிக இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கான உணவு பாதுகாப்பு சான்றிதழ் தட்கல் முறையில் உடனடியாக அளிக்கப்படுகிறது என விளக்கம் அளித்தார்.


இந்திய உணவு பாதுகாப்பு துறை நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் 'இன்சைட்' பயிற்றுனர் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில்  இனிப்பு மற்றும் கார வகைகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள்  அனுமதிக்கப்பட்ட அளவு மற்றும் அனுமதிக்கப்படாத அளவு சார்ந்து இனிப்பு, கார வகைகள் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக   இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள், வழிமுறைகள்,   அடங்கிய விழிப்புணர்வு புத்தகம், பிரசுரங்கள் வழங்கப்பட்டது‌.


நிகழ்வில் தர்மபுரி நகராட்சி , தர்மபுரி ஒன்றியம், காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், கடத்தூர், கம்பைநல்லூர், திப்பம்பட்டி, நல்லம்பள்ளி, அரூர்  என அனைத்து பகுதிகளில்  இருந்து பேக்கரி மற்றும் இனிப்பக, கார தயாரிப்பு உணவு வணிகர்கள், பேக்கரி உரிமையாளர்கள் என திரளாக 50க்கும மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக ஓட்டல் பேக்கரி சங்க செயலாளர் திரு.வேணுகோபால் நன்றி உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad