தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 அக்டோபர், 2024

தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி.


தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கி 50 ஆண்டுகாலம் நிறைவடைந்துள்ளதை சிறப்பிக்கும் வகையில், தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (17.10.2024) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கி 50 ஆண்டுகாலம் நிறைவடைந்துள்ளதையொட்டி, இப்பள்ளியின் பொன்விழா இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் உடல்உறுப்புகளும் மனவளர்ச்சியும் குன்றிய நிலையில் வாழ்ந்தவர்களுக்குப் புத்துணர்வும் புது வாழ்வும் அளிப்பதற்காக ஊனமுற்றவர் என்ற சொல்லை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் என அவர்களுக்குப் பெயர் தந்து அவர்கள் நலன்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின்கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என 27.3.2010 அன்று தனியே ஒரு துறையை புதிதாக ஏற்படுத்தி, அதன்மூலம் பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி எண்ணற்ற சலுகைகளை வழங்கினார். 


அவர் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சி அடையும் நோக்கில், மாற்றுத்திறனாளிகளுக்கென எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, அரசு நகர பேருந்துகளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மற்றும் அவர்களுடன் உதவியாளர் பயணம் செய்யும் வகையில் இலவச பயண திட்டமும், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகை ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/- உயர்த்தி வழங்கும் திட்டமும், அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.


மேலும், முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டமும், சுயதொழில்புரிய மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடனுடன் கூடிய மான்யம் வழங்கும் திட்டமும், இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டமும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கும் திட்டமும், இரு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், கருப்பு கண்ணாடி போன்ற உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தருமபுரி மாவட்டத்தில் 27185 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டைகளும், 24,002 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.00 கோடி செலவில் பராமரிப்பு உதவித்தொகையும், 101 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூபாய் 45.00 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், 75 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூபாய் 75.00 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட இருசக்கர நாற்காலிகளும், 111 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூபாய் 96.75 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ.40.19 இலட்சம் மதிப்பில் ஆசிரியர், உணவூட்டு மானியங்கள் என கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திகொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவேண்டும்.


தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியினை நவீன வசதிகளுடன் கூடிய பள்ளியாக மாற்றவும், உதவிடும் வகையிலும் தருமபுரி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் உதவ வேண்டும். இப்பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவிடும் வகையில் ஒசூர் டைட்டன் நிறுவனம் தனது சமூக பொறுப்பான்மை நிதியிலிருந்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. மேலும், டைட்டன் நிறுவனம் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் மாற்றுத்திறன் உடையோர் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், அவர்களின் திறமையை ஊக்கும்வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், கல்வி கற்று மேன்மையடையவும், தொழில் முனைவோர்களாக மாற்றுத்திறன் படைத்தவர்களாக வாழ்க்கையில் முன்னேற தருமபுரி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் அளித்து, மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து, தடைகளை தகர்த்து, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்த சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார். 


பொன்விழா நிகழ்ச்சியில் பொன்விழா சிறப்பு மலரினை   மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தன் விருப்ப நிதியிலிருந்து தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் 105 மாணவர்களுக்கு தலா ரூ.1000/- வீதம் ரூ.1.05 இலட்சம் மதிப்பில் அஞ்சலக சேமிப்பு வைப்புத்தொகையை மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஜி. கே. மணி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, திரு.இன்பசேகரன், திரு.மனோகரன், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, நகர்மன்றத் தலைவர் திருமதி.மா.இலட்சுமி, கைம்பெண் நல வாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி, பள்ளி தலைமையாசிரியர் திருமதி. தே.ஜெனிலாஜோன்ஸி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad