தருமபுரியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

தருமபுரியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்பு.


தருமபுரியில் போதைப் பொருட்களுக்கு எதிரான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.


தருமபுரி ரோட்டரி சங்கம் மற்றும் தருமபுரியில் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தர்மபுரியில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி தொடக்க விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி கவர்னர் சிவக்குமார், துணை கவர்னர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் விக்ரமன் வரவேற்றார். இந்த போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.


இந்த போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி தனியாக நடைபெற்றது. 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உற்சாகமாக ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட எல்லை வகுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டி.என்.சி. சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் டி.என்.சி. இளங்கோவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தீபா சில்க்ஸ் உரிமையாளர் தியாகராஜன், எஸ்.என். எஸ். தங்க மாளிகை உரிமையாளர் ராஜசேகர், எலைட் ரோட்டரி சங்க தலைவர் விஜய் சங்கரன், செயலாளர் டாக்டர் மணிமாறன், பொருளாளர் வித்தியபூர்ணா  மற்றும் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  ரொக்க பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.


இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெற்றிவேல் முதலிடத்தையும், தமிழ்மணி  இரண்டாம் இடத்தையும், பாலச்சந்திரன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இதேபோன்று பெண்கள் ஆதிரா முதலிடத்தையும், கௌரி இரண்டாம் இடத்தையும், சத்திய கீர்த்தி  மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 


இதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு தர்மபுரி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad