பாலக்கோடு பகுதியில் அதிரடி சோதனை செய்து நெகிழிகள் மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு துறையினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 அக்டோபர், 2024

பாலக்கோடு பகுதியில் அதிரடி சோதனை செய்து நெகிழிகள் மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு துறையினர்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நகர பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு நெகிழி கவர்கள் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி  அவர்கள்  உத்தரவின் பேரில்,உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா அவர்கள் தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு பேருந்து நிலையம் மற்றும்  பள்ளிகூடத்தான் தெரு, சானார் தெரு, சாவடி தெரு, தர்மபுரி ரோடு, எம்.ஜி.ரோடு, தக்காளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த ஆய்வில் சாவடி தெருவில் உள்ள  ஒரு  மளிகை கடையில் காலாவதியான உணவுப் பொருட்கள், ஜங்ஃபுட் தின்பண்டங்களை  பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி அக்கடைக்கு 2 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர். இதே போல் பள்ளிக்கூடத்தான் தெருவில் ஒரு மளிகை கடையில் உரிய விபரங்கள் இல்லாத குளிர்பான பாட்டில்கள்  அப்புறப்படுத்தி அக்கடைக்கு ஆயிரம் ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டது.    


தர்மபுரி மெயின் ரோடு மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதியில் உள்ள  உணவகங்களில் இரண்டு உணவகங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கவர்கள் பறிமுதல் செய்து இரண்டு உணவகங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது .


உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் டீக்கடைகளில்  ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை செய்யப்பட்ட நெகிழி கவர்களை பயன்படுத்தி சூடான காப்பி, தேநீர், சாம்பார், ரசம்,  மற்றும் உணவுப் பொருட்கள் பார்சல் மற்றும் பரிமாறுதல் கூடாது எனவும் சுகாதாரம் பேணவும்  எச்சரிக்கை செய்யப்பட்டது. 


தக்காளி மார்க்கெட் பகுதி மற்றும் 4 ரோடு  பெட்ரோல் பங்க் அருகில் என 2  பெட்டி கடையில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர்.


பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், அவர்கள் பரிந்துரையின் பேரில்  புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட 2 பெட்டி கடை  உரிமையாளர்க்கும் தலா  25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு துறையினருடன், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad