தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 17.10.2024 அன்று நடைபெற்ற தொழிற்கடன் வசதியாக்கல் மற்றும் கல்விக் கடன் முகாமில் 24 நபர்களுக்கு ரூ.12.76 கோடி மதிப்பீட்டில் தொழிற்கடன் மற்றும் கல்வி கடன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் பெற்றதாகவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்களிப்பதாகவும் உள்ளதால் தருமபுரி மாவட்ட குறு,சிறு மற்றம் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2024-25 ஆம் ஆண்டில் ரூ.1631.78 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டுமென ஆண்டுக் கடன் திட்ட அறிக்கையில் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை வென்றடைய, காலண்டுக்கொருமுறை தொழிற்கடன் வழங்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென மாவட்ட தொழில் மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் தொழிற்கடன் வசதியாக்கல் மற்றும் கல்விக் கடன் முகாம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 01.04.2024 முதல் 30.09.2024 வரை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.843.20 கோடியும் தொழில் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 01.10.2024 முதல் 14.10.2024 வரை 179 பயனடைந்த பயனாளிகளுக்கு ரூ.25.89 கோடிக்கான தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில் சுமார் ரூ.12.76 கோடிக்கு 24 நபர்களுக்கு தொழிற்கடன் வழங்கப்படுகிறது.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் (NEEDS) உற்பத்தி மற்றும் சேவை பிரிவின் கீழ் தொழில் தொடங்க 25% மானியத்துடன் கூடிய ரூபாய் 5 கோடி வரை தொழிற்கடன் மற்றும் 3% பின்முனை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (UYEGP) வியாபாரம் செய்ய 25% மானியத்துடன் கூடிய ரூபாய் 15 இலட்சம் வரை தொழிற் கடன் வழங்கப்படுகிறது.
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில்(PMEGP) உற்பத்தி மற்றம் சேவை பிரிவின் கீழ் தொழில் தொடங்க நகர்புறங்களில் 25% மற்றும் கிராமப்புறங்களில் 35% மானியத்துடன் ரூ.50 இலட்சம் வரை உற்பத்தி தொழிலுக்கும் ரூ.20 இலட்சம் வரை சேவை சார்ந்த தொழிலுக்கும் தொழிற்கடனாக வழங்கப்படுகிறது. பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME). இத்திட்டத்தில் மானியம் திட்ட மதிப்பீட்டில் 35% அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS). இத்திட்டத்தில் மானியத் தொகை திட்ட தொகையில் 35% மானியம் அதிகபட்சம் ரூ1.5 கோடி வரை வழங்கப்படும். இது தவிர புதிதாக தொழில் தொடங்கி நடத்திவரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.150.00 இலட்சம் வரை முதலீட்டு மானியமும், மின்மானியமாக 3 ஆண்டுகளுக்கு 20 % மின்கட்டண மானியமும் மற்றும் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட தொழில் மையம் மூலம் ஒற்றை சாளர முறையில் (Single window) நிறுவனங்களுக்கு தொழில் துவங்க பல்வேறு துறைகளின் அனுமதி பெற வழிவகை செய்யப்படுகிறது. டேன் காயர் மூலம் தென்னை நார் மற்றும் கயிறு பொருட்கள் மதிப்பு கூட்டல் பயிற்சியும், பழுதில்லா உற்பத்தி விளைவில்லா உற்பத்தி (ZED) உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு விளக்கம் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்முனைவோர்கள் தமிழ்நாடு அரசால் மாவட்ட தொழில்மையத்தின் மூலம் வழங்கப்படும் அரசு திட்டங்களில் பயன்பெற்று, மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு பங்களிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்ச்த்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.எஸ்.பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.எஸ்.ராமஜெயம், டேன் காயர் இன்டர்நேசனல் மார்கெட்ஸ் அசோசியேட் திரு.கௌதம்சிவம், மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் திரு.வெங்கடேஷ், செயலாளர் திரு.சரவணன், தருமபுரி மாவட்ட தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் திரு.வினோத், தொழில் முனைவோர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக