தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கில துறையின் சார்பாக இரண்டு நாள் சிறப்பு பயிற்சி பட்டறை 'திரைப்படம் மற்றும் ஊடக கல்வி: எழுத்திலிருந்து உருவாக்கம் வரை' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் சென்னை ஸ்டோரி பேட்டை புரோடக்ஷன் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திரு. புகழ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திரைப்படம் மற்றும் ஊடகம் சார்ந்த பல்வேறு நுணுக்கங்களை பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் குறும்படம் மற்றும் ஆவணப்படம் எடுப்பதற்கான மிக முக்கிய தேவைகள் அவ்வாறு படப்பிடிப்பை மேற்கொள்ளும் பொழுது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னனென்ன, எந்தெந்த கோணங்களில் புகைப்படக் கருவிகளை வைத்திருத்தல் வேண்டும் என்பன பற்றியும் மேலும் இன்றைய கால சூழலில் திரைப்படம் மற்றும் ஊடகத்துறையில் இருக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் பற்றியும் விரிவாகவும் எளிமையாகவும் எடுத்துரைத்தார். இந்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையின் பலனாக மாணாக்கர்கள் குழுவாக இணைந்து ஆவணப்படம் மற்றும் குறும்படங்களை உருவாக்கினர்.
இக்குறும்படங்களை பார்வையிட்ட சிறப்பு விருந்தினர் அதில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை பற்றி எடுத்துரைத்தார். முன்னதாக இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத்துறை தலைவருமான பேராசிரியர் கோவிந்தராஜ் வரவேற்புரை வழங்கி இந்நிகழ்வுக்கான நோக்கம் பற்றியும் எடுத்துரைத்தார். தொடர்ந்து ஆராய்ச்சி மைய இயக்குனர் பொ முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். துறை உதவி பேராசிரியை முனைவர் கிருத்திகா நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வை முதலாம் ஆண்டு மாணவி செல்வி ஜெயஸ்ரீ மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி ஹாசிரா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி மாணாக்கர்கள் பெருமாள், பழனிச்சாமி, மிதுன் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக