தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க ஓசூர் மண்டலம் சார்பில் புத்தொழில் நிறுவனங்கள், இளந்தொழில் முனைவோர் மற்றும் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்களுடன் “Coffee with Collector” என்னும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.11.2024) நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: புத்தொழில் நிறுவனங்கள், இளந்தொழில் முனைவோர் மற்றும் தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் நிறுவனங்களைக் குறித்து அறிமுகப் படுத்திக் கொண்டு, தருமபுரியில் புத்தொழில் செய்வதற்கு உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்களைப் பற்றி கலந்துரையாடி, இளந்தொழில் முனைவோர்களின் தேவைகளைக் குறித்தும் கேட்டறியப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் புத்தொழில் நிறுவனங்கள் வேகமாக உருவாகி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தை பயன்படுத்தி உங்கள் நிறுவனங்களை பெரும் நிறுவனமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் தேவைகளின் அடிப்படையில் அந்தந்த துறைசார் அலுவலர்கள் மூலமாக வேண்டிய அரசு நலத்திட்ட உதவிகள் செய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் புத்தொழில் அட்டைக்காக விண்ணப்பித்திருந்த நிறுவனங்களுக்கு புத்தொழில் அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் திரு.பிரசன்ன பாலமுருகன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க ஓசூர் மண்டல திட்ட மேலாளர் ஜிஜின் துரை மற்றும் இணை அலுவலர் தீபக் ராஜு மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், இளந்தொழில் முனைவோர் மற்றும் தொழில் ஆர்வமுள்ள 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக