தர்மபுரி ஒன்றியத்தில் வானவில் மன்ற செயல்பாடுகளை அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நேர்த்தியாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக மூன்று வானவில் மன்ற தன்னார்வ கருத்தாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆறு , ஏழு மற்றும் எட்டு வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டியும், மாணவர்களிடையே புதுமையான செயல்பாடுகளை அடையாளம் கண்டு வானவில் மன்றம் திட்டத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட EMIS செயலியில் அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்ட மாணாக்கர்கள் கேட்கும் கேள்விகள் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வானவில் மன்ற போட்டிகள் பள்ளி வட்டார மாவட்ட மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024-25 கல்வியாண்டிற்கான வட்டார அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் மதிப்புமிகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஜோதி சந்திரா அவர்களின் அறிவுறுத்தலுக்கணங்க 9.11.2024 அன்று நகராட்சி தொடக்கப்பள்ளி அப்பாவு நகர் பள்ளியில் நடைபெற்றது. இதில் தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 22 அறிவியல் மன்றக் குழுக்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் நீர்நிலைகள் சுத்திகரிப்பு தொழில் நுட்பங்கள், பசுமை உட்கட்டமைப்பு நகர்ப்புற வடிவமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு, உணவு பதப்படுத்துதலும் வேதியியல் மாற்றங்களும், கட்டுமான தொழில்நுட்பத்தில் கணித கோட்பாடுகள் ஆகிய. தலைப்புகளில் தாங்கள் செய்து வந்த ஆய்வு மாதிரிகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை விளக்கினர்.
தர்மபுரி வட்டார அளவிலான போட்டிகளில் சிறப்பாக தங்கள் ஆய்வு மாதிரிகளை விளக்கிய வெள்ளோலை உயர்நிலைப்பள்ளி வானவில் குழு முதல் இடமும், மணலூர் நடுநிலைப்பள்ளி பாம் குழு (Palm) இரண்டாம் இடமும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த ஜாஸ்மின் குழு மூன்றாம் இடமும் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். முன்னதாக வட்டார அளவிலான போட்டிகளை வட்டார வளமையும் மேற்பார்வையாளர் திரு.முல்லைவேந்தன் துவக்கி வைத்தார். வானவில் மன்ற கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக