மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர்-2024 திங்கள் வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942.00 மி.மீ ஆகும். இந்த ஆண்டு தற்பொழுது வரை 649.46 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் 2024-2025ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறுவகைகள் உள்ளிட்ட உணவு தானியபயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள், பருத்தி, கரும்புசாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்பொழுது வரை 1,35,318 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
2024-ஆம் ஆண்டிற்கு நெல் வகைகளான ஆடுதுறை 39, நெல் ADT-53 ஆடுதுறை 54, CO-51, BPT 5204, TKM-13, வெள்ளைப்பொன்னி, VGD-1 ஆகியவை 23.965 மெ.டன் இருப்பும், சிறுதானியங்களான ராகி, சோளம், சாமை, கம்பு, மக்காச்சோளம் 83.522 மெ.டன் இருப்பும், பயறுவகைகளான துவரை, உளுந்து, பச்சைபயறு, காராமணி, கொள்ளு, கொண்டகடலை ஆகியவை 44.151 மெ.டன் இருப்பும், எண்ணெய்வித்துக்களில் நிலக்கடலை 9.83 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2024-2025ஆம் ஆண்டிற்கு 922.00 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில், நவம்பர் - 2024 திங்கள் வரை 454.50 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர (2024-25) உரத்தேவை 41,030 மெட்ரிக்டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 12,153 மெட்ரிக்டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா, பொட்டாஷ் மொபலிசிங்பாக்டீரியா, அசோஸ்பாஸ், ஜிங்க்சொலிபிலைசிங்பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் 2024-2025ஆம் ஆண்டிற்கு 55,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 4,100 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.
35,074 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். திருந்திய பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 6166 விவசாயிகள் 4875.43 ஏக்கர் பரப்பு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 2024-2025 ஆம் ஆண்டிற்கு 750.00 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 425.50 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த 31.10.2024 வரை நெல், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 30,087 விவசாயிகளுக்கு ரூ.296.45 கோடி பயிர் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை தருமபுரி மாவட்ட கூட்டுறவுசர்க்கரை ஆலையில் 26,494 குவிண்டாலும், கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 48,509 குவிண்டாலும் சர்க்கரை இருப்பு உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் மூலம் துறை வாரியான திட்ட விளக்க உரையாற்றப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப் பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்டஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, கோபாலபுரம் சுப்பரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.பிரியா, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு) மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ரவி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மரிய ரவி ஜெயக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சரவணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.பி.அறிவழகன், கால்நடைபராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.இளவரசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.பாத்திமா, அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக