கம்பைநல்லூரில் நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 நவம்பர், 2024

கம்பைநல்லூரில் நடமாடும் உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி.


தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக சிறு, நடமாடும் மற்றும் சாலையோர சிற்றுண்டி, பானிபூரி, துரித உணவு (பாஸ்ட் புட்), சில்லி சிக்கன், சிப்ஸ் உள்ளிட்ட  உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை  பயிற்சி மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு  முகாம், காரிமங்கலம் தாலுக்கா மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பைநல்லூரில் கடை வீதி வாசவிமகால்  அரங்கில்  ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், அருண், திருப்பதி, மற்றும் கம்பைநல்லூர் அனைத்து வணிகர் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமையில் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் இபி இன்போவேஸ் பிரைவேட் லிமிடெட் (EP Infoways Pvt. Ltd., ) பயிற்றுனர் சலீம்,  பங்கேற்று உணவு வணிகர்களுக்கு பயிற்றுவித்தார்.


பயிற்சியில் சிறு, நடமாடும் உணவு வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய  நடைமுறைகள் தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், கவச உடை, மேலங்கி, தலைஉரை,கை உரை, பொருள் மேலாண்மை, பொருட்கள் வாங்குதல், இருப்பு வைத்தல், தயார் செய்தல், கையாளுதல், பரிமாறுதல், மேலும் பூச்சிகள் கட்டுபாடு, நான்கு விதமான பொருட்கள் கெடுவதற்கான சூழ்நிலைகள் தவிர்த்தல் (4D),  குடிநீர் தன்மை, உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய  விவரங்கள் குறித்தும் , குளிர் பதன பெட்டிகளில் பால் பொருட்கள் மற்றும் இறைச்சிகள் வைத்திருக்க வேண்டிய  குளிர்நிலை குறித்தும் தெளிவாக விளக்கினார் . 


மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் திருமதி.ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமை உரையில் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உணவு பொருள்களை சுத்தமாக, தரமானதாக தயார் செய்யவும், உணவினால் ஏற்படும்  இடர்பாடுகளை தவிர்க்கவும் இப் பயிற்சி பெரு உதவியாக இருக்கும் என்றார். மேலும் இனி நடமாடும் உணவு வணிகர்ளுக்கான உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற 5 வருடத்திற்கு உண்டான கட்டணம்  விலக்கு அளிக்கப்படுகிறது. 


மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம் எனவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை கண்டிப்பாக தவிர்க்கவும், உணவு பாதுகாப்பு சார்ந்த மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்த புகார்களுக்கு  9444042322 என்ற எண்ணிலோ, உணவு பாதுகாப்பு புகார் ஆப் செயலி மூலமாகவோ தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.


நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்நகோபால்,  உணவுப் பொருட்களில் வீட்டளவில் எளிய முறையில் கலப்படம் கண்டறிதல்  செயல் விளக்கம், குறிப்பாக தேயிலை, தேன், சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி,நெய் மற்றும் அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு  குறித்து நேரடி செயல் விளக்கம் உணவுப் பொருட்களைக் கொண்டு செய்து காட்டினார். மேலும் உணவு பொருள் பாக்கெட்டில் காண வேண்டிய அம்சங்களான உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி,  உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்டவை குறித்தும்  வணிகர்களுக்கு விழிப்புணர்வு செய்தார். 


நிகழ்வில் கம்பைநல்லூர், திப்பம்பட்டி, இருமத்தூர், நவலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட  வணிகர்கள் பங்கேற்றனர். கம்பைநல்லூர் அனைத்து வணிகர்  சங்க செயலாளர் லட்சுமிநாராயணன்  நன்றி  உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad