தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 18.12.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான ”நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தில் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக (Unstable) இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம்.
குறிப்பாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடரலாம். தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48" திட்டத்தின் மூலம் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, அரூர், பாலக்கோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் 3 தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட 8 மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சாலை விபத்தில் காயமடைந்த 4,310 நபர்களுக்கு ரூ.2.65 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாளநத்தம் பகுதியைச் சேர்ந்த திரு. முருகன் அவர்கள் உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தினால் தலையில் அடிபட்டதோடு, கை மற்றும் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின்கீழ் சிகிச்சைப்பெற்று, குணமடைந்து, இத்திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்தது மனம் என்று தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக