இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தருமபுரியில் பேசியது: தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கைவினை கலைஞர்கள், சிற்பக் கலை வல்லுநர்கள் உள்ளிட்டோர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் வளர்ச்சிக்காக விஷ்வகர்மா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சாதி அடிப்படையிலான திட்டம் போல் சித்தரித்து தமிழக அரசு ஏற்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, அப்பட்டமாக தமிழக மக்களை வஞ்சிக்கும், ஏமாற்றும் செயல்.
எதிர்காலத்தில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், கலச்சாரம் உலக அரங்கில் போய் சேரக் கூடாது என்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கை இது. இதுபோன்ற பல பாரம்பரிய கலைகள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகிறது. இந்த சூழலில் தமிழக முதல்வர் அவைகளை மேலும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவின் இதர மாநிலங்கள் அனைத்திலும் இந்த திட்டம் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் மறைமுக தாக்குதல் நடக்கிறது. வாக்களித்த மக்களுக்கு முதல்வர் செய்கிற மிகப்பெரிய துரோகம் இது. சுய நலனுக்காக, அரசியல் நலனுக்காக எதையும் செய்யலாம் என நினைப்பது நாட்டின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்.
60 ஆண்டுகளுக்கு முன்பு குலத்தொழில் என்றெல்லாம் கூறி ராஜாஜியை பழித்த செயலை இப்போதும் ஆரம்பித்துள்ளார்கள். ராஜாஜி அன்று நாட்டுக்காக செய்த சாதனைகளை எல்லாம் மறைப்பதற்காக எடுத்த முடிவுகள் அவை, கலைகள் அழியாமல், தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் எனில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஷ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த வரைமுறைகளை ஏற்படுத்தலாம்.
விஷ்வகர்மா திட்ட பயனாளிகளை தேர்வு செய்யும் அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை மறுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இதற்கான உரிமையை வழங்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். இது முட்டாள் தனம். மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும்போது நல்லவற்றை கூற வேண்டும். யார் கூறி முதலமைச்சர் இதை அறிவித்தார் என தெரியவில்லை. ஆனால், முதல்வர் தன்னை திருத்திக் கொண்டு இந்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் இருக்கிறார் என்ற காரணத்தால் இதுபோன்ற தான் தோன்றித் தனமான செயல்களை செய்யும் முயற்சியில் முதல்வரும், ஆளும் கட்சியும் செய்கிறனரோ என கருதுகிறோம்.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, தருமபுரி மாவட்டத்தில் சுரங்கங்களில் தவறுகள் நடைபெறுகிறது, இதற்கு அரசு அதிகாரிகள் துணையாக உள்ளனர் என திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் அந்த வழக்கறிஞருக்கு நீதிமன்றம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதன் மூலம் வழக்கறிஞர் சமுதாயத்துக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெற்றதன் பின்னணி சொந்த ஆதாயம் தேட வேண்டும் என்பதாகும்.
இதுபோன்று சொந்த ஆதாயத்துக்காக கட்சி நடத்தும் திமுக-வினர் தற்போது விஷ்வகர்மா திட்டத்தையும் அதற்காகத் தான் எதிர்க்கிறார்கள் இவ்வாறு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக