மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டமாகும்.
இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 நவம்பர் மாதத்திற்கான உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இன்று (20.11.2024) காலை 09.00 மணி முதல் நாளை (21.11.2024) காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இத்திட்ட முகாமில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அமுதம் சில்லறை விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு உள்ளிட்டவற்றை குறித்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வழக்குகள் பதிவு செய்த பதிவேடுகள், வருகை பதிவேடு மற்றும் துப்பாக்கி லைசென்ஸ் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதோடு, காவல் நிலையத்தில் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி முதல்நிலை ஊராட்சியில் ரூ.2.41 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், பி.பள்ளிப்பட்டியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணி மற்றும் குடிநீர் வழங்க அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அஜ்ஜம்பட்டி கிராமத்தில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், அஜ்ஜம்பட்டி கிராமத்தில் பயனாளியின் வீடு புனரமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு செய்ததோடு, அஜ்ஜம்பட்டி நியாய விலைக்கடையில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அஜ்ஜம்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்தும், மாணவர்களின் கற்றல் திறன் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, கர்ப்பணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததோடு, மருத்துவ உபகரணங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், போதக்காடு மாரியம்மன் கோவில் சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டிமுடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு, சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்து கருத்துக்களை பெற்றார். ஆய்வினை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்மதிப்பாய்வின் போது, வருகைதந்த அலுவலர்கள் களத்தின் சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் பதிவு முகாமை பார்வையிட்டு, நேரிடையாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான பயனாளிகளுக்கு சென்று அடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வடகிழக்கு பருவமழையையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, உரிய அறிவுரை வழங்கப்பட்டது.
பின்னர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், இருளப்பட்டி ஊராட்சி, இந்திரா நகர், இருளர் காலனியில் ஊராட்சியின் அடிப்படை தேவைகள் குறித்து இருளர் இன மக்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி, மாலையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுரை வழங்கவுள்ளார்கள்.
இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் திரு.சின்னசாமி, இணை இயக்குநர் (மருத்துவம்) திருமதி.சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜெயந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சரவணன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.குணசேகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் திருமதி.தேன்மொழி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.இளவரசன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் திருமதி.வள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.செல்வம், திரு.ஜோதிகணேஷ் மற்றும் மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக