தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான சென்னப்பன் கொட்டாய், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், திருமல்வாடி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வனபகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இப்பகுதிகளில் விவசாயிகள் கரும்பு, நிலக்கடலை, வாழை, கேழ்வரகு, சோளம், தக்காளி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் என்பதால் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் யானை, காட்டுபன்றி, சிறுத்தை, மயில் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் விவசாய பயிர்களையும், கோழி, ஆடு போன்ற கால்நடைகளையும் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
ஊருக்குள் காட்டு விலங்குகள் வருவதை கட்டுபடுத்தகோரி விவசாயிகள் வனத்துறையிடம் முறையிட்டும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்க்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பாலக்கோடு அடுத்த சென்னப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் நாட்டுசோளம் மற்றும் தக்காளி பயிரிட்டு இருந்தார்.
கடந்த ஒரு வாரமாக 30க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில் இது குறித்து வனத்துறையினரிடம் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த கோரி மனு அளித்தனர்.
ஆனால் வனத்துறையினர் கண்டு கொள்ளாததால் நேற்றிரவு கூட்டம் கூட்டமாக வந்த காட்டு பன்றிகள் 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு அறுவடைக்கு தயராக இருந்த நாட்டு சோள பயிர்களை முற்றிலும் சேதப்படுத்தி சென்றுள்ளன. தொடர்ந்து இது போன்ற செயல்களால் விவசாயம் செய்ய முடியாத அளவிற்க்கு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக காட்டு பன்றிகளை ஊருக்குள் வராமல் கட்டுபடுத்த வேண்டும் எனவும், அதே போன்று சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சாலையில் இறங்கி போராட்டம் செய்வோம் என எச்சரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக