தருமபுரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கெடுத்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி யிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
கோரிக்கை மனுவில் பின்வரும் தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.
- ஆண்டு சராசரி மழைப்பொழிவு குறைவாக உள்ள தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் காவிரி உபரி நீரை நீரேற்றம் மூலம் ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
- ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் மூலம் மொரப்பூர். கடத்தூர் ஒன்றியங்களில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பிட வேண்டும், சென்னாக்கல் பாசனக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
- மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒன்றிய, மாநில நிதிநிலை அறிக்கைகளில் ஆண்டுதோறும் ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
- தருமபுரி சிப்காட் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
- வட்டம் தோறும் உணவுப்பொருள் பதப்படுத்துதல் உள்ளிட்ட வேளாண் சார்பு தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும்.
- மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை திட்டத்தை அமலாக்க வேண்டும்.
- ஏரியூர் ஒன்றியம், ஏமனூர், பாலக்கோடு ஒன்றியம், மல்லுப்பட்டி, வீராசனூர், ஜிட்டாண்ட அள்ளி, அண்ணாமலை அள்ளி, பிக்கன அள்ளி பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை வனத்துறையினர் நில வெளியேற்றம் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மேற்கண்ட அனுபவ நிலத்தில் மா சாகுபடி செய்து வரும் விவசாயிகளிடம் மா மரங்களுக்கு வரி வசூலிப்பதை கைவிடவேண்டும்.
- பேவுஅள்ளி பஞ்சாயத்து சக்கிலிநத்தம் கிராமத்தில் உள்ள அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
- தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியில் அமைக்க வேண்டும்.
- ஏரிமலை கோட்டூர் மலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள மலை கிராமங்களில் சாலை போக்குவரத்து, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்வன விலங்குகளிடமிருந்து விவசாயப் பயிர்களைப் பாதுகாக்க வனத்தைச் சுற்றிலும் மின் கம்பி வேலிகள் அமைக்க வேண்டும்.
- நுண் நிதி நிறுவனங்களின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தவும். கூட்டுறவு மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மகளிருக்கு கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏரியூரில் மீனவர் கூட்டுறவு சொசைட்டி அமைக்க வேண்டும்.
- பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர் பகுதிகளில் சேகோ ஆலைகள் அமைக்க வேண்டும்.
- அரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உருவாக்கிட வேண்டும்.
- தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் கோட்டையூர் பரிசல் துறையிலிருந்து சேலம் மாவட்டத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து துவங்கிட வேண்டும்.
- அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்களுக்கும் உரிய இழப்பீடும் வேலையிழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப் போல ரூ 6000 ஓய்வூதியம் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துக்கு ஏ.ஏ.ஒய் குடும்ப அட்டை வழங்குதல் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம், அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் வார்டு அமைத்தல், அரசு அலுவலகங் களில் சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
- நல்லம்பள்ளி ஒன்றியம் டொக்குபோதன அள்ளி, பூவல்மடுவு கிராமத்தில் நீண்டகாலமாக சாகுபடி செய்து வரும் அனுபவ நிலத்தை மேய்ச்சல்தரை புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து விவசாயிகளுக்கு நிலப்பட்டா மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.
- கோவிட் பேரிடர் காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்துப் பேருந்துகளையும் மீண்டும் இயக்கி கிராமப்புறம் மற்றும் நகரப்பகுதிகளுக்கு பேருந்து சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- பென்னாகரம் வட்டம் பிக்கிலி ஊராட்சி மலையூர், கிராமத்துக்கு பி.எம்.ஜி.எஸ்.ஒய் சாலையில் அரசுப் பேருந்து இயக்கவேண்டும்.
- தருமபுரி மாவட்டத்தில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும்.
- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நகரப்பகுதிகளுக்கு விரிவு படுத்த வேண்டும்.தருமபுரி மாவட்டத்தில் அரூர், பென்னாகரம், பாலக்கோடு வட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களில் செல்போன் சேவை கிடைக்க செல்போன் கோபுரங்கள் அமைக்க வேண்டும்.
- தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டம் சிட்டிங் உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆதிக்க சாதியினர் தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வதை தடுத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் நில உடைமை மற்றும் அனுபவ உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.
- தருமபுரி மாவட்டத்தில் பின்தங்கிய வட்டங்களில் நடைபெறும் இளவயது திருமணங்கள், பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் வளரிளம் பெண்கள் கருத்தரிக்கும் நிலையைத் தடுத்திட பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள் கொண்டுவர வேண்டும்.
- மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மயானம் மற்றும் மயானத்துக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
- அனைத்து ஒன்றிய தலைமையிடம் மற்றும் பேரூராட்சிகளில் விளையாட்டு அரங்கம் (மினி ஸ்டேடியம்) மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்.
- மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் வரத்துக் கால்வாய்களில் கால முறைப்படி தூர்வாரி மழைநீரைத் தேக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 24-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் எனமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. விசுவநாதன் ஆகியோர் மனு கொடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக