மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 டிசம்பர், 2024

மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (26.12.2024) நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதுக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் இதுக்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.


அனைத்து கிராமங்களிலும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூடி குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் தடுத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது முன்கூட்டியே கண்டறியப்பட்டு அத்திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்த தகவலை 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும். வளரிளம் பருவ கருத்தரித்தல் குறித்து பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். 


நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் அருகில் போதை பொருட்கள் விற்பதை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருட்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டு மறுவாழ்வுநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்கள் கல்வியினை தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.


பின்னர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீதர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.எம்.செல்வம், குழந்தை நலக்குழு உறுப்பினர் திருமதி.பிரமிளா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் திருமதி.பிரேமா, மருத்துவத்துறை, சமூகநலத்துறை மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad