மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டம், அரூர், மருதிப்பட்டியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ரூ.9.89 கோடி மதிப்பீட்டில் 8 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.26.10 இலட்சம் மதிப்பீட்டில் 6 புதிய பேருந்து நிழற்கூடங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 1,721 பயனாளிகளுக்கு ரூ.19.58 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (21.12.2024) வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமைவகித்தார். மேலும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம் வெள்ளாளப்பட்டி மற்றும் அரூர் வட்டத்திற்குட்பட்ட மருதிப்பட்டி, டி.அம்மாப்பேட்டை, பெரியப்பட்டி, சிட்லிங் ஆகிய 5 இடங்களில் தலா ரூ.1.275 கோடி வீதம் ரூ.6.38 கோடி மதிப்பீட்டில் 5 அறிவுசார்மையங்கள், அரூர் வட்டம், சித்தேரி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 3 வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள், அரூர் வட்டம், வாச்சாத்தி மேல்நிலைப்பள்ளியில் ரூ.31.00 இலட்சம் மதிப்பீட்டில் கழிவறைக் கட்டடம், அரூர் வட்டம், நரிப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ.9.89 கோடி மதிப்பீட்டில் 8 திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.
இதனை தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அரூர் வட்டத்தில் சிட்லிங் ஊராட்சிக்குட்பட்ட கோம்பை, நம்மாங்காடு, முள்ளிக்காடு, வேலனூர், பெரியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதூர், ராஜீவ் காந்தி நகர் ஆகிய 6 இடங்களில் தலா ரூ.4.35 இலட்சம் வீதம் ரூ.26.10 இலட்சம் மதிப்பீட்டில் 6 புதிய பேருந்து நிழற்கூடங்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்துவைத்தார்கள்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், பொன்னேரி ஊராட்சி, ஈட்டியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் RBIOCGS - 2023-2024 திட்டத்தின் கீழ், ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 புதிய வகுப்பறை கட்டடங்கள், கொங்கவேம்பு ஊராட்சி, கூத்தாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் CFSIDS - 2023-2024 திட்டத்தின் கீழ், ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 புதிய வகுப்பறை கட்டடங்கள், செட்ரப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மான்யம் 2023 - 2024 திட்டத்தின் கீழ், ரூ.39.68 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையம் கட்டடம், கொளகம்பட்டி ஊராட்சியில் கிராம ஊராட்சி செயலகம் 2022 - 2023 திட்டத்தின் கீழ், ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கிராம ஊராட்சி செயலக கட்டடம், அரூர் ஒன்றியம், ஜம்மனஅள்ளி ஊராட்சி, எ.டி.காலனியில் 2023 - 2024 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், தீர்த்தமலை ஊராட்சி, பொய்யப்பட்டி கிராமத்தில் 2022 - 2023 ஆம் ஆண்டு MGNREGS மற்றும் 15-வது நிதி குழு மான்யம் திட்டத்தின் கீழ், ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கிராம ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், எல்லபுடையாம்பட்டி ஊராட்சி, கெளாப்பாறை அம்பேத்கார் காலனி, வரட்டாறு ஓடையில் 2024 - 2025 ஆம் ஆண்டு MGNREGS திட்டத்தின் கீழ், ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சிறு பாலம், மொரப்பூர் ஒன்றியம், ஆர். கோபிநாதம்பட்டி ஊராட்சியில் 2023-2024 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.2.662 கோடி மதிப்பீட்டில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்துவைத்தார்கள்.
பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தை சேர்ந்த 614 பயனாளிகளுக்கு ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் 162 நத்தம் வீட்டுமனை பட்டாக்கள், 267 இணையவழி பட்டாக்கள், 185 மின்னணு குடும்பஅட்டைகளையும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 366 பயனாளிகளுக்கு ரூ.3.66 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகள், பயிர் கடன்கள், சுய உதவிக்குழு கடன் உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (மகளிர் திட்டம்) சார்பில் 503 பயனாளிகளுக்கு ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்கடன் உதவிகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 12 விவசாயிகளுக்கு ரூ.3.60 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு ரூ.10.70 இலட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகைகளையும், ஊரக நலப்பணிகள் சார்பில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் என மொத்தம் 1721 பயனாளிகளுக்கு ரூ.19.58 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரகப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் இன்றைய தினம் அரூரில் பழங்குடியினர் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் 14 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், தாட்கோ சார்பில் ரூ.9.89 கோடி மதிப்பீட்டில் 8 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 1,721 பயனாளிகளுக்கு ரூ.19.58 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்திற்கு 4 முறை வருகை புரிந்து, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இம்மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் தருமபுரி மாவட்டம் தொப்பூரிலும், ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பாளையம் புதூரிலும் துவக்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வாச்சாத்தி மற்றும் கலசப்பாடி மலைப்பகுதியில் முதல்முறையாக ரூ.12.75 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் சுமார் 2 இலட்சத்து 85 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000/- மகளிர் உரிமைத்தொகை பெற்றும், விடியல் பயணத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் தினசரி சுமார் 1 இலட்சத்து 35 ஆயிரம் பெண் பயணிகள் பயணம் செய்தும் பயன்பெற்று வருகின்றனர்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், தருமபுரியில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரிகளில் பயிலும் சுமார் 17 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் பெற்று பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தினால் மாணவிகள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் பயிலும் 6,339 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 58,676 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் 363 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் சுமார் 1.12 இலட்சம் விவசாயிகளும், சுமார் 40 ஆயிரம் விவசாயிகளின் நகைகடன் ரூபாய் 157 கோடி தள்ளுபடி செய்யப்பட்டும் பயனடைந்துள்ளனர். கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் சுமார் ரூபாய் 4218 கோடியில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்றவர்கள் பல்வேறு தொழில்களை தொடங்கி தொழில்முனைவோர்களாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றனர்.
இதுபோன்று தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டங்களால் கிராம வளர்ச்சி மற்றும் சமுதாய வளர்ச்சி மேம்பட்டு, மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே, தருமபுரி மாவட்ட பொதுமக்கள் அரசால் வழங்கப்படும் தங்களுக்கு ஏற்ற மற்றும் தகுதியான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்து, பயன்பெற்று வாழ்க்கைதரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தாட்கோ செயற்பொறியாளர் திரு. பி.நடராஜன், முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, பழங்குடியினர் நலன் திட்ட அலுவலர் திரு. பி.எஸ். கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இன்பசேகரன், திரு.மனோகரன், திருமதி.வேடம்மாள், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சின்னசாமி, கைம்பெண் நல வாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக