தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்டூர் கிராமத்தில் புதியதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அகற்றக்கோரி பாமகவினர் சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே போச்சம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள குட்டூர் கிராமத்தில் புதியதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் மதுக்கடையை திறந்துள்ளது,இந்த மதுக்கடை பல உட்கிராமங்களுக்கு பேருந்து நிறுத்தமாக செயல்பட்டு வருகிறது , இந்தப் பிரிவு சாலையை மாணவ மாணவிகள் காலை, மாலை என இருவேளைகளும் பயன்படுத்தி வருகின்றனர், மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பெண்கள் , மது பிரியர்களின் தொல்லை காரணமாக அச்ச உணர்வுடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாமகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். எனவே சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததாலும், பெண்கள் நீண்ட நேரம் அங்கு காத்திருந்ததாலும் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் பாமகவினரிடயே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மதுக்கடையை விரைவில் வேறு இடத்தில் மாற்றி திறக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. தமிழக அரசு படிப்படியாக மதுக்கடையை குறைப்பதாக கூறிவிட்டு, இடம் மாறுதல் என்ற பெயரில் பல்வேறு புதிய மதுக்கடைகளை திறந்து கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக